Tuesday, November 18, 2014

விசாலிக்குட்டி

 

அக்காக்குட்டியின் சீப்பை
அக்குளுக்குள் ஒளித்து
மெல்ல நழுவினாள்
பின்புறத்து வடலியால்
அணில்குஞ்சை துரத்தினாலும்
குறி
சிதறிக்கிடக்கிற பனம்பழம்தான்
எத்தி நடக்கையில்
பசும்புல் தரையில்
மஞ்சள் களிம்பு
பாட்டி சொன்னாளாம்
புத்திவரும் மயிர் வளரும்
பூசிப்பார் ......
கமக்கட்டினுள்ளிருந்து
இறகு முளைக்கும்.....நீ
வேலிகளைத்தாண்டியும்
பறப்பாய்.....பறப்பாய்.....
பாட்டிசொல் கேள்.....
தேய்துத்தேய்த்து
சிகையலங்காரம் செய்தாள்
ராணிப்புறாப்போல்
சிறகை விரித்துப்பறந்தாள்
முள்வேலிகளைத்தாண்டி...
வெடித்து சிதறிப்போய்
பசும்புல் தரையில்
குருதிக்குழம்பு
பாட்டியின் கணிப்பில்
எங்கோ ஒரு பிசகு
ஆனந்த் பிரசாத் 
 
  • VJ Yogesh //பாட்டியின் கணிப்பில் எங்கோ ஒரு பிசகு// உண்மை!
  • Jeyakumar Antoni வடலிபாவிப் பனம்பழம் பொறுக்கிய சின்னவளின் விபரீத ஆசை, முள்வேலி தாண்டிப்பறந்து குருதிக்குழம்பான சோகக்கதையொன்று கவிதைவரிகளில். கிரேக்க கதைசொல்லி எசாப்பின் நீதிமொழிக்கதைகள் (Aesop's Fables) போன்று, ஒரு சிறு கவிதை வடிவில் நீதிமொழியொன்று அகப்படுத்தியுள்ளமை சிறப்பு. பாராட்டுக்கள் !!
  • George Singarajah சிலிர்த்து உடல்
    இந்த நெகடிவ் கவிதைக்கு
    உங்கள் படம் ஏற்புடையதாக இல்லை கவிஞரே .....
  • Ravi Kathirgamu கற்பனைக்கும் நிஜத்திற்கும் இடையே ஆன சண்டைதான் வாழ்க்கை, காலை இழந்தாலும் கடமையை செய்பவன் உயர்ந்தவன். வாழ்க உங்கள் திறமை.
  • Narayana Moorthy கவிதைக்கு போடப்பட்டிருக்கும் படமே இன்னொரு கவிதையாக விரிகிறது. "இவளை" உன்னித்துப் பாருங்கள்.

    விசாலிக்குட்டி பாட்டியின் கதையை நம்பியதால் குருதிக்குழம்பு ஆனதுபோல "இவள்" சாக மாட்டாள்... முன்னே கிடக்கும் பொய்க்கால் "இவளுக்கு" கண்ணி வெடியின் கொடுமையை எச்சரி
    த்திருக்கும்..

    அந்த எச்சரிக்கை உணர்வால் இந்தச் சிறுமியின் உள்ளிருக்கும் ”அறிவு” மேம்பட்டிருக்கும்.

    பின்புறத்து வடலியால் அணில்குஞ்சை துரத்தினாலும்; குறி சிதறிக்கிடக்கிற பனம்பழம்தான் என்றாலும் கண்ணிவெடி பற்றி "இவள்" கணிப்பு பிசகிவிடாது...

    "இவள்" அப்படியெல்லாம் சாக மாட்டாள் என்பதுதான் பட்ம் சொல்லும் சோகம்.
  • Santhiya Thiraviam சிதறிக்கிடக்கிற பனம்பழம்தான்

    எத்தி நடக்கையில்


    பசும்புல் தரையில்

    மஞ்சள் களிம்பு

    பாட்டி சொன்னாளாம்
  • Santhiya Thiraviam வாழ்க உங்கள் திறமை.
  • George Singarajah மனதில் வலிகளோடு
  • Vanitha Solomon Devasigamony "விசாலிக்குட்டி" கலங்க வைத்து விட்டாள்!
    உதிர்க்கும் புன்னகையோடு உணவு பரிமாறும் காட்சி
    உள்ளத்தை உருக்குகிறது!

    ......பசும்புல் தரையில் மஞ்சள் களிம்பு,
    .... பசும்புல் தரையில் குருதிக்குழம்பு
    பாட்டியின் கணிப்பில் எங்கோ ஒரு பிசகு . அருமை!
  • Lakshmi Chitoor Subramaniam Anand Prasad really beautiful poem. Feel like translating it into English. But then you can do it yourself. why don't you?
  • Kiruba Pillai பாட்டியின் பிசகுக் கணிப்பு ....தழுதழுக்க வைத்து விட்டீர்கள் கவிஞரே ..
  • Kiruba Pillai பச்சை நிற புல்வெளியில் சிவப்பு இரத்தம்...
  • Jey Baba கை வலிக்க வரைந்த கவிதையின் முடிவில் ரத்தம் உறைந்தது,,படித்து முடிந்தபோது ஒரு கணம் உலகமே உறைந்ததே!!! பகிர்வுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்..
  • Ks Sivakumaran Thank you. Good andrealistic

No comments:

Post a Comment