Saturday, February 4, 2012

கி.பி.2000.


எனது நாட்கள்
எழுதித்தந்த கவிதைகளை
பிரித்துப்படிக்கிறேன்
மீண்டுமோர் பொழுதில்!
விரிந்து பரந்த
வானமும் பூமியும்...
வேடிக்கை நிறைந்த
வாழ்வும் மனிதரும்...
கூடிக்களித்த
சுகங்களும் சோகமும்...!
எல்லைகளை யாரும்
வகுத்திருக்கவில்லை அப்போது.
களியாட்டங்களின் நடுவே
காணாமல் போயிருந்தவர்கள்
ராட்டினக்குதிரைகளில்
சீரான தாளலயங்களோடு
சுழன்றுகொண்டிருந்தவர்கள்
கோபுரம்போல அடுக்கியிருந்த
காலி டப்பாக்கள்மீது
குறிதப்பாது யாரோ இறுதியில்
பந்தை விட்டெறிந்துவிட......
யாவும் கலைந்துபோயிற்று
யாரையுமே காணவில்லை.
குருவிகள்கூட
இருட்டில் இரைதேடப்போய்
பரிணாமத்தில் புதிய
வெளவால்களாய் கூர்ப்படைந்தன
அறுபது செக்கன்கள்
ஒருமணி நேரமானது
பிரபஞ்சத்தின்
மூக்குக் கண்ணாடிக்குள்ளால்
வெறுமையின் விம்பங்கள்
நிலமகள் தன் நிலமிழக்க...
அதன் உடலிலும்
காலத்தின் சுருக்கங்கள்
ஒருகாலத்தில் அதன்
மதர்த்துச்செழித்த தேகத்தை
எப்படியெல்லாம் அனுபவித்தார்கள்?
ஓய்ந்துபோன வாஸவதத்தாபோல்
கெளதம புத்தனை
தேடிக்கொண்டிருக்கிறது!
மணலாற்று நீரை
பொசுங்கிய தாவரங்களுக்காய்
நம்பிக்கையோடு வார்க்கும்
எலும்புக்கூடுகளை
சுட்டுத்தள்ள
யாரோ, எங்கேயோ
துப்பாக்கி செய்துகொண்டிருக்கிறார்கள்
வெடிகுண்டுக்குப்பிறந்த
குழந்தைகள் படுக்கையில்
சிறுநீர் கழித்துக்கொள்கின்றன.
மதுபான விடுதிகளுக்கு மேலாக
குண்டு போடக்கூடாதென்பது
சர்வதேச சட்டமானது
எனது நாட்களின்
கவிதைத் தொகுதியின்
சில பக்கங்களில்
பொய்கள்
கவிதையெழுதியிருந்தன.....
''வாழ்க்கை'' என்ற தலைப்பில்!!!