Wednesday, October 10, 2012

ஒரு Acadamic இன் ஆதங்கம்

ஒரு Acadamic இன் ஆதங்கம்


போன முதல்நாள்......
புதுப்பழக்கம் என்றாலும்
ஆனவரை பாடுபட்டேன்
ஆஹா.....அனுபவம்தான்!
வெங்காயத் தோலுரிக்க
வெகுநேரம் ஆனதென
அங்கொருவன் கோபித்தான்....
அதற்கும் நான் புதுசு
கிழங்கின் தோல் சீவுங்கால்
கிழுகிழுப்பாய்த் தானிருக்கும்
முழங்கையில் லேசாய்
முதுகிலுமோர் மெல்லியதாய்
வலித்தாலும்....
மெல்ல வழக்கத்தில் கொண்டுவரல்
பலிக்காதோ......பார்ப்போம்!
பத்துமணி போல
'மப்பா' அடிக்கையில் ஓர்
மகத்தான கலை நுட்பம்
தப்பாமல் செய்தால்
தாக்காது இடுப்பதனை
இல்லையேல் உபத்திரவம்
இதுவெல்லாம் பெரிதில்லை
நானூறு பாகை....
நரகக் கொதிநிலையில் தானூறி
வருகின்ற பீங்கானும், கோப்பைகளும்......
முக்காலம் தானுணர்ந்த
முனிவர்கள்தாம் வளர்க்கும்
அக்னியின் கர்ப்பத்தில்
அவை சுத்தமாகி வர.....
கையால் தொடமுடியா
கறுமம் பிடிச்ச கொதி....
மெய்யாலும் சூடேறி
மெலிகின்ற நேரத்தே....
குளிர்பதன அறையினிலோ
குதூகலந்தான்.....
பழவகைகள்....தளிரிலைகள் தின்று
தாகம் தணிந்திடலாம்
Cook மாரின் பேயறுவை......
குறிப்பறிந்து சிரித்தாலோ
அற்புதமாய் ஓருணவு
அன்பளிப்பாய் வீற்றிருக்கும்
சற்றே இளைப்பாறி....
Saladeஐ...ஓர் கைபார்த்து
மீண்டும் உயிர் பெற்று
Machine அருகே போனாலோ
கோப்பை நிறைந்து
குவிந்து வழிந்திருக்கும்
சாப்பிட்ட யாவுமே
சடுதியில் மறைந்துவிட
தட்டில் கிடப்பதைத்
தட்டிவிடும் போதெல்லாம்......
பட்டப்படிப்பின்
சான்றிதழ்களாய் தெரியும்!!!
ஆனந்தப்ரசாத்.

  • Subramaniam Kuneswaran நானூறு பாகை....

    நரகக் கொதிநிலையில் தானூறி

    வருகின்ற பீங்கானும், கோப்பைகளும்......ஏற்கனவே நான் படித்த கவிதைதான். எனது ஆய்வுமற்றும் கட்டுரைகளில் மேற்கோள் காட்டியிருக்கிறேன். இன்னும் எழுதுங்கள்.
  • Giritharan Navaratnam இக்கவிதை எனக்கு என் அமெரிக்க அனுபவத்தினொரு பகுதியினை நினைவு படுத்தியது. அந்த அனுபவத்தை எனது நாவலான 'அமெரிக்கா: சுவர்களுக்கப்பா'லில் பதிவு செய்திருக்கின்றேன். புலம்பெயர்ந்து வரும் முதல் தலைமுறைக்கு இது போன்ற அனுபவங்கள் மிகவும் சாதாரணம். இன்றைய வியட்நாமின் தந்தையான ஹோ.சி.மிங் அவரது பாரிஸ் வாழ்க்கையில் கோப்பை கழுவி தன் வாழ்வை நகர்த்தியதாக எங்கோ வாசித்திருக்கின்றேன். நான் கனடா வந்திருந்தபோது எனது நண்பர்கள் சிலர் இருந்த 'அபார்ட்மென்'ட்டிற்குச் செல்வதுண்டு. அங்கு இருபத்து நான்கு மணி நேரமும் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும். இருபத்து நான்கு மணி நேரமும் அடுப்பில் சோறும், உறைப்பான பன்றிக் கறியும் கொதித்துக் கொண்டிருக்கும். எந்நேரமும் ஒருவர் சோபாவிலிருந்தபடி தொலைக்காட்சியினைப் பார்த்தபடி சாப்பிட்டுக்கொண்டிருப்பார். எந்நேரமும் ஓரிருவர் தூக்கத்திலிருப்பார்கள். அப்பொழுதெல்லாம் அங்கிருந்தவர்கள் உணவகங்களில் ஒவ்வொருநாளூம் மூன்று 'ஷிவ்ட்' கோப்பை கழுவிக் கொண்டிருந்தார்கள். இந்தக் கவிதை அந்த ஞாபகங்களை ஏற்படுத்தி விட்டது.

    'கோப்பை நிறைந்து
    குவிந்து வழிந்திருக்கும்
    சாப்பிட்ட யாவுமே
    சடுதியில் மறைந்துவிட
    தட்டில் கிடப்பதைத்
    தட்டிவிடும் போதெல்லாம்......
    பட்டப்படிப்பின்
    சான்றிதழ்களாய் தெரியும்'

    இந்த வரிகள் எம் மண்ணின் சமூக, அரசியல் நிகழ்வுகளையும், போராட்டத்தினையும் அவை பற்றிய ஞாபகங்களையும் நினைவுக்குக் கொண்டுவந்தன. எமக்கென்றொரு மண் , சுதந்திரக் காற்று வீசும் மண் இருந்திருந்தால் இவ்விதம் உலகம் முழுவதும் சிதறியிருக்கத் தேவையில்லையே என்றொரு எண்ணமும் எழுந்தது. ஆனால், அதே சமயத்தில் இவ்விதமான சிதறல் எம் அனுபவத்தையும், உலக அறிவினையும் வளப்படுத்தியுமிருக்கின்றன என்பதையும் நினைத்துக் கொண்டேன்.
  • Thiru Thirukkumaran சாப்பிட்ட யாவுமே

    சடுதியில் மறைந்துவிட

    தட்டில் கிடப்பதைத்


    தட்டிவிடும் போதெல்லாம்......

    பட்டப்படிப்பின்

    சான்றிதழ்களாய் தெரியும்!!!// mm
  • Vathiri C Raveendran அருமை அருமை.
  • Chandra Ravindran · 60 mutual friends
    அருமை! இதையே தினமும் வாழ்நாள் முழுவதும் வீட்டுக்கடமை என்ற பெயரில் செய்யும் பெண்கள் நிலை இதனிலும் அருமையோ அருமை!!! :)))
  • Vj Yogesh "முக்காலம் தானுணர்ந்த

    முனிவர்கள்தாம் வளர்க்கும்

    அக்னியின் கர்ப்பத்தில்


    அவை சுத்தமாகி வர...."
  • Vj Yogesh "தட்டில் கிடப்பதைத்

    தட்டிவிடும் போதெல்லாம்......

    பட்டப்படிப்பின்


    சான்றிதழ்களாய் தெரியும்!!!"
  • Siva Mathivathany ரசித்தேன்
  • Rajaji Rajagopalan --

    Angels and Demons (By Dan Brown, Barnes & Noble) படத்தில், வத்திகான் நகரம் முழுவதையும் ஒரு இரவுக்குள் ஒளியால் மட்டுமே நிர்மூலமாக்கக்கூடிய சக்திவாய்ந்த எதிரியை அழிப்பதற்கு அமெரிக்காவிலிருந்து அழைக்கப்பட்ட Harvard symbologist Robert Langdon (Tom Hank
    s) அவர்களிடம் மறைந்த போப்பாண்டவரின் மிக நெருங்கிய உதவியாளர் கேட்கிறார்,

    Do you believe in God, Sir?

    அதற்கு Langdon, ஒருகணம் அவரை உற்று நோக்கியபின் உறுதியோடு தன் பதிலைக் கூறுகிறார்:

    “I am an academic.”

    Academic! இந்த உணர்வும் அதன்மீதுகொண்ட ஆழ்ந்த பற்றும், இன்னொருவகையாகக் கூறின், இறுமாப்பும், அவன் அறிவும் ஆற்றலும் சூறையாடப்படுவதைப் பொறுக்கமுடியாமல், அதற்கு எதிராகப் போராடமுடியாதிருக்கின்ற தனது இயலாமைக்கு இலக்கிய உருவம் கொடுக்கிறான் இக் கவிஞன். இதன் தலைப்பில் “ஆதங்கம்” எனக் கூறவந்தது ஆனந்தின் இயல்பான அடக்கம்பாற்பட்டதேயாகும் என்பது என் எண்ணம்.

    நான் விளங்கிக்கொண்டவரை, அழுக்குக் கோப்பைகளும் உடலைத் தகிக்கும் வெக்கையும் மற்றும் எல்லாம் இரண்டாம் பட்சமே.

    பின் குறிப்பு:
    மேற்கு நாடுகளில் குடியேறிய தமிழர்களில் பெரும்பாலான, முன் எவ்வித தொழில் அனுபவமும் இல்லாத இளைஞர்கள் இத்தொழிலைச் செய்யவேண்டிய சூழ் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். சிலர் ஆரம்பத்தில் செய்தார்கள், சிலர் இன்றும் தொடர்ந்து செய்கிறார்கள். இன்னும் சிலர் தாம் ஆரம்பத்தில் கோப்பை கழுவிய ரெஸ்டாரண்டுகளையே விலைக்கு வாங்கி முதலாளியாகியிருக்கிறார்கள்.

    [எல்லாமாய் 32 மொழிகளில் வந்து பெரு வரவேற்பைப் பெற்ற இப்படத்தை எல்லாரும் பார்க்க வேண்டும்]
  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan இரசித்தேன் கவிதையை. "..நரகக் கொதிநிலையில் தானூறி
    வருகின்ற பீங்கானும், கோப்பைகளும்........"

2 comments:

  1. I worked in a teashop and theatre canteen during my teenage for a brief spell in Anurdhapura during late sixties.I can feel the pain and agony.Last lines are nerve wrecking.good work ap.cheers.

    ReplyDelete
    Replies
    1. Whatever we do in order to financially support ourselves for existence is always acceptable and adorable. There is no discrimination of what we do for living. But what we do to step up our ability to achieve the ultimate goal based upon our intellect or creativity....that matters!!! Thank you for your comment, sir!!

      Delete