Wednesday, December 26, 2012

உலக கவிதை இயக்கங்கள்.

 


''பெரியதோட்டத்திலே

ஒரேயொரு பூ தான் பூத்திருக்கிறது!

ஆயிரக்கணக்கான பட்டுப்பூச்சிகள்

அந்த ஒரு பூவைக் கண்டு கொள்கின்றன.

தேடிக்காண்பதே கவிதை.....

தேடாமல் காண இயலாது.''

பிரபல எழுத்தாளரும், விமர்சகருமான க.நா.சுப்ரமண்யம் அவர்கள்

'தேடிக்காண்பது' என்ற தலைப்பில் எழுதிய கவிதை இது.
எவ்வளவு உண்மை?
1930 களில் கம்யூனிஸ்டுகளிடையே வழக்கிலிருந்த new verse என்கிற பதத்தை
புதுக்கவிதை என்று மொழிபெயர்த்ததோடு அறுபதுகளில் புதுக்கவிதை இயக்கத்தில்
தீவிரமான பங்கெடுத்துக்கொண்டவர் இவர்.
இவரதுகவிதைத்தொகுதியொன்றின் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
''சங்கீதத்தின் மொழி பிரபஞ்சம் முழுவதுக்கும் உரியது என்கிறார்கள்.
இது காரணமாகத்தானோ என்னவோ
மொழிகளால் எல்லை வகுக்கப்பட்ட கவிதை
சங்கீதத்துடன் சேரும்போது
பிரபஞ்ச பாஷையாக மாறிவிடுகிறது
என்று ஒரு மரபு நம்மிடையே ஏற்பட்டிருக்கிறது.
இதனை நான் ஏனிங்கே குறிப்பிடுகிறேனென்றால்
தப்பித்தவறி யாராவது சந்தத்தோடு மரபுக் கவிதை எழுதினால்
அது கவிதை இலக்கியத்தில் பரிசோதனைமுயற்சியென்பதாக
விமர்சிக்கும் அளவுக்கு ஞானசிகாமணிகள்
நம்மிடையே பெருகிவரும் இந்நேரத்தில் நல்ல
கவிதையைப்பற்றிய பிரக்ஞை தேவை என்பதற்காகவே.
"கவிதை'' என்கின்ற தலைப்பில் இவர் எழுதிய கவிதையொன்றை பார்ப்போம்.
''கவிதை வேண்டுமானால்
சொற்களைக் கூராக்கு
இசையை ஒதுக்கிவிடு
உருவகங்களை உயிராக்கு
சிந்தனைகளை நேராக்கு
உபயோகமற்ற பாத்திரங்களை
ஏற்றிவைக்கும் மச்சிருட்டாக
கவிதையை நினைக்காதே''

.நா.சுப்ரமண்யம் நல்ல கவிதையை அடையாளம் கண்டுகொள்ள அழுத்தம் திருத்தமாக வரைவிலக்கணம் கூறுகிறார்:
''பொதுவாக ஒரு நான்கு விஷயங்கள் சொல்லாம். மரபுக்கவிதைக்கும், புதுக்கவிதைக்கும் பொதுவான விஷயங்கள்இவை. வார்த்தைச் சேர்க்கைகள் காதில் ஒரு தரம் ஒலித்துஉள்ளத்தில் மீண்டும் எதிரொலி எழுப்புகிறதா என்பது முதல் கேள்வி. இரண்டாவதாக எந்தக்காலத்திலுமே வாழ்க்கை எந்தக் காலத்து மனிதனுக்கும் சிக்கலானதாகத்தானிருந்து வந்திருக்கிறது. அந்தந்தக்காலத்துக் கவிதை நல்ல கவிதை. அந்தக்காலத்து சிக்கலை அப்படியே தருகிறது நமக்கு. அப்படி இன்றைய புதுக்கவிதை இன்றைய வாழ்க்கைச்சிக்கலையும், புதிரையும் போலவே முதலில் புரியாதது போல இருந்து படிக்க படிக்கப் புரியத்தொடங்குகின்றதா என்பது மூன்றாவது கேள்வி. கடைசியாக கேட்டுக்கொள்ள வேண்டிய நான்காவது கேள்வி இது. நள்ளிரவில்விழித்துக்கொள்ளும்போது இந்தக்கவிதையில் ஒரு அடியாவது திடுதிப்பென்று காரண காரியமில்லாது மனசில்தானே தோன்றி
புது அர்த்தம் தருகிறமாதிரி இருக்கிறதா? எந்தக் கவிதையைப் படித்துவிட்டு இந்த நான்கு கேள்விகளுக்கும் ஆம்..ஆம்...ஆம்...ஆம்...என்று பதிலளிக்க முடிகிறதோ அந்தக்கவிதை நல்ல கவிதை, உயர் கவிதை என்று நாம் முடிவு கட்டிவிடலாம். 'புதுக்கவிதை' மட்டும்தான் புதுக்கவிதை என்பதில்லை. பழங்கவிதையும் இன்று வாசித்து அனுபவிக்கும் போது புதுக்கவிதை தான். கவிதைக்கு, எல்லா நல்ல கவிதைக்குமே புதுப்பித்துக்கொள்ளும் சக்தி உண்டென்பது எல்லாமொழி இலக்கியங்களிலுமே நிதர்சனமாக காணக்கிடக்கிற உண்மை.
சிலப்பதிகாரம் அதன் காலத்தில் மட்டுமல்ல இன்றும் புதுக்கவிதைதான். தமிழ் கவிதைக்கு கிழடு தட்டிய பருவமிது என்பதில்யாருக்கும் சந்தேகமிருக்க முடியாது. கவிதையரசி மீண்டும்முன்போலத் தமிழில் கொலு வீற்றிருக்க வேண்டும், உயிருள்ளவளாக இருக்கவேண்டும் என்றால் புதுமுயற்சிகள், புதுச்சோதனைகள் நடைபெற்றாக வேண்டும். யாப்பு, எதுகை,மோனை இருப்பதில் தவறில்லை. நல்ல கவிதைக்கு முட்டுக்கட்டை அதில் இல்லை. இன்றைய வாழ்கையின் சிக்கலை பிரதிபலிக்காமல் இன்றைய சூழலின் குழப்பத்தை எடுத்துக்காட்டாமல் பழமையான மனப்பான்மையே புதுக்கவிதை பிறப்பதற்குத் தடையாகவுள்ளது.

"சாதித்திருக்கிறாயா நீ....

என்றது ஒரு கேள்வி

என்னிடம் இப்பொழுது

பதில் இல்லை

என் உடல் மரித்தபின்

எழும் கல்தூண்

முன் கேள்.....!''

'சாதனை' என்கிற தலைப்பில் எஸ்.கே. மதுசூதனன் (ஆத்மாநாம்)

எழுதியதொரு கவிதை இது. மரணத்தின் பின்தான் மகத்துவங்கள்

தெரிய வருகிறது.


''ஐன்ஸ்டீனை ஒரு கனவில் நான் கண்டேன்

ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகப் புல்வெளியில்...

அது வசந்தகாலம்.

மண்டியிட்டு அவரது இளம்கட்டை விரலை

முத்தமிட்டேன்

போப்புக்குச் செய்வது போல.

அவரது இளம் முகம் ரோஜாக்குமிழியிட்டது.

தனியான பிரபஞ்சத்தை

கண்டுபிடித்தேன் நான் --- ஒரு

கன்னியைப் போல....

மெஸ்கலின் அனுபவத்தில் இருந்து......

பேசினேன் நான்.

''ஆம்...அதுவே தன்னைப் பிறப்பித்துக்கொண்டது''

திறந்த வெளியில்

பிரபஞ்சமாய்

வெயிலில் நாங்கள்

மதிய உணவுக்காக உட்கார்ந்தோம்

டென்னிஸ் க்ளப்பில்

பேராசிரியர்களின் மனைவிகள்.

எதிர்பார்த்தது போலவே

எங்கள் சந்திப்பு

முடிவற்று... தொடர்ந்தது

அவர் முஷ்டியை முத்தமிட்ட

என் செயல்

எதிர்பாராமல் புனிதமாயிருந்தது

ஏனெனில்,

அணுகுண்டைப் பற்றி நான்

பேச்செடுக்கவில்லை.''

அணு ஆயுத எதிர்ப்புப்பற்றி வலிமையான குரல் கொடுத்த ஒரேயொரு அமெரிக்க கவிஞர் என்ற வகையில் இலக்கிய உலகின் கவனத்தை தன்பால் ஈர்த்தவர் அலென் கின்ஸ்பேர்க்.
(Allen Ginsberg) அவருடைய புகழ் வாய்ந்த கவிதைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பரிசு (X'mas Gift) என்ற கவிதையின் தமிழாக்கம் மேலுள்ளது.

ஏர்னெஸ்டோ கார்தினல் (Ernesto Cardinal) ஒரு கவி. கத்தோலிக்க பாதிரியார். நிகராகுவாவின் புரட்சியின் வலிமையான ஆதரவாளர். இன்றைய பீதி நிலவும் உலகிலிருந்து தூய்மையும்,
தெளிவான சிந்தனையும் நிறைந்த உலகம் ஒன்றுக்கு இட்டுச் செல்வதற்கான திசை காட்டியாகவும் இருக்கிறார். சர்வாதிகாரி சமோஸாவைக் கவிழ்க்க 1954ம் ஆண்டு நடந்து தோல்வியில் முடிந்த புரட்சியில் பங்கேற்று உயிர் தப்பியவர். நிகாராகுவாவின் விடுதலைப்போராட்டத்தின் தந்தையான அகஸ்டோ சாண்டினோவின் கல்லறை எங்குள்ளதென்று யாருக்கும் தெரியாது. இதைப்போலவே 1954இலும் நடந்தது. அப்போது சர்வாதிகாரியாக இருந்த அனஸ்தாசியோ ஸோமோஸா கார்சியாவை கொல்ல முயன்ற புரட்சியாளர்களில் அடோல்போ பேஸ்போன்(Adolfo Baezbone) என்பவரும் ஒருவர். இனி கவிதையைப் படித்துப்பார்போம்;
''அடோல்போ பேஸ்போனின் நினைவுச்சின்னத்தில் பொறிப்பதற்காக.......''
(An epitaph to the tomb of Adolfo Beazbone) என்பது தலைப்பு.

  • Anand Prasad இக்கட்டுரையின் இரண்டாம் பகுதி
    நாளை தொடரும்.....
  • Arasan Elayathamby அலன் கின்ஸ்பெர்க் கவிதைகளை யார் இப்பல்லாம் படிகின்றார்கள் ,,துணுக்கு துணுக்கா நெடுந்தீவு முகிலன் போர்ந்றவர் எழுதும் கவிதைகள் தான் எல்லாரும் படிகின்றார்களே!
  • Vanitha Devasigamony ''பெரியதோட்டத்திலே
    ஒரேயொரு பூ தான் பூத்திருக்கிறது!
    ஆயிரக்கணக்கான பட்டுப்பூச்சிகள்
    அந்த ஒரு பூவைக் கண்டு கொள்கின்றன.
    தேடிக்காண்பதே கவிதை.....
    தேடாமல் காண இயலாது.''
  • Gowry Sivapalan கவிதை காதிலே நுழைந்து கருத்திலே இடம்பிடிக்க வேண்டும். எழுதும் எழுத்து பிறர் பயன் கருதியதாக இருக்க வேண்டும். உண்மையே . மரம் பற்றிய வைரமுத்து கவிதை ஒரு முறை படித்தேன் . ஆனால் இன்னும் ஒவ்வொரு வரிகளும் உள்ளத்துள் நிறைந்துள்ளன. நீட்டோலை வாசியான் நின்றான் குறிப்பறிய மாட்டான் காட்டு நடுவில் நல்மரம் என்று பாடிய அவ்வையாரை இடித்துரைத்தார். இவ்வாறு கவிதை கருத்தை கவர வேண்டும் . நல்ல நிறைவான கட்டுரை தந்துள்ளீர்கள் . தொடருங்கள்
  • Thiru Thirukkumaran கவிதை எழுத வாழ்வின் ஊடே ஓடும் தர்க்கத்தின் இழையை உணரும் திறன் வேண்டும், அதன் விளைவு தார்மீக உணர்வாகி வீரியத்தின் உலையில் உருகிப் பிழம்பின் நிலையை எய்தி பின் எழுத்தில் வர வேண்டும் - பிரமிள்
  • Arasan Elayathamby ஒருவரின் கவிதை அனுபவம் எல்லாருக்கும் பொதுவாக அமையாது ! தமிழ்நாடையே கலக்கிய இரா முருகனின் "ஒரு கிராமத்து பெண்ணின் தலைப் பிரசவம்" கவிதைய பலர் குப்பை எண்டும் சொனார்களே !
  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan அழகாகச் சொல்லியிருக்கிறார் "..நள்ளிரவில்விழித்துக்கொள்ளும்போது இந்தக்கவிதையில் ஒரு அடியாவது திடுதிப்பென்று காரண காரியமில்லாது மனசில்தானே தோன்றி
    புது அர்த்தம் தருகிறமாதிரி இருக்கிறதா..." ஆம் அதுதான் கவிதை.

No comments:

Post a Comment