நள்ளிரவில் ஆழ
நடுக்கடலில் வெண்நுரையை
மெள்ள வகிடெடுத்து
விரைகிறது எனதுகலம்
சுக்கான் பிடித்து
சுழற்றுகிற இறுமாப்பில்
எக்காளமிட்டு
எகிறியது என்மனது
யாரோ கிரேக்கத்து
வியாபாரியின் கப்பல்
ஏராய்க்கடலின்
எழுபரப்பும் உழுதுவர
எனைநம்பி
முப்பத்து ஏழுஉயிர்கள் துயில
முழுநிலவும் வானத்தே
முளைக்கும் நட்சத்ரங்களுமாய்
நழுவுகிற நீர்ப்பரப்பில்
நானொருவன் குறித்த
திசையில் பயணிக்கும்
திறனாய்ந்த சாரதியாய்
இசையின் சுரங்களைப்போல
இழைந்து பேரலைகளுடன்
சமரசங்கள் செய்த
சாமர்தியங்கள் எல்லாம்
அமர வாசகங்கள்
ஆழ்கடலை வென்றேன்
விழத்தெரியா நின்றேன்
விழுந்தேன் எனதுமண்ணில்
உழத்தெரி யாத உடல்
ஆனந்தபிரசாத்
No comments:
Post a Comment