இடது புறமாக ஒருக்களித்து
படுத்துக்கொண்டிருக்கிறேன்...
இமைத்திரையில்
நாளதுவரையில் பட்டவைகள்
சலனித்தன....
மொத்தமாக வாழ்நாளில்
உத்தரவாதமில்லாது போன
நாட்களை கழித்து
எஞ்சியிருந்தவற்றை
எழுதிக் கணக்கிட்டு
ஐந்தொகையை பதிய முயல்கிறேன்
நீங்களும் நானும்
நானும் நீங்களும்
வரவு செலவுகளாய்
லாப நஷ்டங்களாய்
உடனிருந்து கணக்கோடு
உடன்படிக்கை செய்தீர்கள்....
மூன்றுகால் என்றாலும்
முயல்தான்...முயல்தான்.....
இலக்கங்களோடு வாழ்வை
நகர்த்துவதென் இலக்கல்ல.....
எனக்கென்று
வழங்கப்பட்ட நாட்கள்
ஒன்றிலிருந்து பூஜ்யம்வரை.....
உதிர்ந்துகொண்டிருக்கும்
இலைகளை
மரங்கள்
கணக்குவைத்துக்கொள்வதில்லைதான்!
இழந்த நாட்களை
எண்ணப்போய்.....இப்போது
நெடுஞ்சாண்கிடையாக
படுத்துக்கொண்டிருக்கிறேன்
நான் மரமல்ல......!
ஆனந்தபிரசாத்.
No comments:
Post a Comment