பாகம் (2)
தவறிப்போய் ஒரு
மிதி வெடியில் கால்பதித்தேன்
சுவறிப்போய்
சதைத்துண்டங்கள்
உலக வரைபடத்தின்
ஒவ்வொரு மூலையிலும்
ஒட்டிக்கிடந்தன!!!
பாகம் (1)
ஒரு காலம்.......
என்மீது அமர்ந்திருந்துதான்
இவர்கள் இசைத்தார்கள்......
பிரண்டு கிடந்த என்னுடல் மேல்
பிறளாதேயிருந்த
பெருமரத்தின் நிழலில்.....
எத்தனை இனிய மாலைகள் ஏகின?
எத்தனை இலக்கியங்கள்
அரசியல்கள் அலசப்பட்டன?
பட்டுப்போய்க்கொண்டிருந்த
எனக்குத்தெரியும்......ஒரு
சங்கத்தின் செயலாளரைப்போல......
முரண்பாடுகள் விவாதங்கள்
முறிந்தாலும் பிணைந்தாலும்
சாராயத்தின் சங்கமத்தில்
சமன்பாடு கண்டது
இயக்கங்கள் ஐந்தாயினும்
இயங்கியலே பேசினார்கள்!!!
எதிர்பாராது வெடித்துச்சிதறிய
என் திரண்டிருந்த தசைத்துண்டங்கள்
எங்கேயோ ஒரு
இறைமை தாண்டிய வெளிகளில்....
இறைந்து கிடந்தன.....
இந்த மரக்குத்தியிலிருந்து
வாழ்ந்த நட்புகள்
எங்கெங்கோ திசை தெறித்து....
சாகாமல்.....
செத்துக்கொண்டிருக்கிறது.
ஆனந்தபிரசாத்.
{இது கவிதையல்ல நண்பர்களே.....
நவனீதன், புதுவை இரத்தினதுரை,
விக்னேச்வரமூர்த்தி, அருள்ஜோதி, ஞானம், சிவதாசன்...
இந்த வரிசையில்.....
நோபர்ட், றேமன், செல்வம், வின்சென்ட், தில்லை முகிலன்
இன்னும் எத்தைனையோ சங்கமித்த
உறுப்பினர்கள் உருத்தெரியாமல்........
திருக்கோணமலை....திருமால் வீதியில்
இந்த இறந்துகொண்டிருக்கும்
மரக்குத்திக்கு தெரியும்.......
இது நமது கதையென்று!!!}
No comments:
Post a Comment