காதுக்குள் திரண்டு கிடந்த மெழுகும்...ஓர்
மாதுக்குள் விளைந்த மகவும் ------ பாதிப்பு
வலயத்தை தாண்டி வருகின்ற வலிகளோ
கலயத்தில் நுரைத்த கள் ----உலகத்து
மாயைகளில் அமிழாது மனது விடுதலையாய்
போயகலும் ஓர்நாட் பொழுது ----- சாயைகளோ
கனவுகளில் சஞ்சரிக்கும்! கனபரிமாணம் கடந்து
சினமெழுமோர் போதின் சிலிர்ப்பு ------ நணவில்
மறுநாள் புலரும்.... மழலையினின்றும் பிரிந்த
வெறுநாளாய் ஆகும் வெளி ------ மறுப்பில்
வலியாகி மீண்டுமொரு வயிற்றுக்குள் விளைகின்ற
நலியாத சுகத்தை நண்ணும் ----- மெலியாது
மீண்டும்..... ஒருநாள் முருங்கை மரமேறும்
காண்பதெலாம் ஏகும் கனவாய் ------ ஆண்டு
உருண்டு...உருண்டு உருக்குலைந்து ஓடும்.....
திரண்ட புஜத்தில் தளர்வு ----- மருண்டு
வாழ்வியலை சாடியே வைகின்ற வசவுகளின்
வீழ்படிவை கவிதை விழுங்கும் ------ ஆழ்மனது
வெயிலற....நிழலின் வெளிச்ச குளிர்ச்சியினுள்
துயில்கொள்ளும் மெல்ல துவண்டு.
ஆனந்தபிரசாத்.
No comments:
Post a Comment