ஒரு சுயதரிசனம்
தரைமார்க்கம் ஆகாய மார்க்க மாக
தப்பிவந்து கனடாவில் தஞ்சம் கேட்டு
திரவியங்கள் தேடவென காலை மாலை
தினமுமிரு வேலைகளை செய்து கொண்டு
அரைவிலையில் மலிவாக ஈற்ரன்....பேயில்
ஆடைகளோ டேனையவை வாங்கிச் சேர்த்து
நரைகாணும் முன்பேயோர் நங்கை தேடி
நாளும் அலைகின்ற கதை நிறைய உண்டு
இலக்கியத்தின் மீதுபெரு நாட்டம் கொண்டே
இயன்றவரை படைப்புகளை தந்து முன்னம்
கலக்கியதோர் காலம்....எழில் வசந்தம் போல
கனவாகி மெல்ல அது கலைந்து போகும்!!!
புலரும்....ஒரு விடியலென தேடிக் கொண்டு
புயலாகிப்போனதொரு காலம் உண்டு
பலரும் ஓர்காலத்தில் சிவப்பில் தோய்ந்து
பார்தவர்கள்தானே...ஓர் பலனும் இல்லை
ஆடியிலே அன்றொருநாள் வந்து போன
அவலங்கள் கண்டதனால் ஆத்திரத்தில்
காடு மலையென்றலைந்து களைத்துப்போய் பின்
கண்டபடி பரதேசி போல் திரிந்து
தாடியுடனே வெறுமை வளர்த்துக் கண்ட
தார்மீக கோபத்தில் கண் சிவந்து
நாடியதோர் சிகப்புநிற சாயம் போக
நாடுகளாய் அலைந்ததுவும் நிறைய உண்டு
ஆன்மாவை கொன்றுவிட்டு வாழ வேண்டும்.....
அதிலுமொரு குலைநடுக்கும் குளிரும் வேறு.....
ஏன்தானிவ்வாழ்க்கை என எண்ணிப் பார்த்தால்
ஏக்கந்தான்.....முன்நாளில் முல்லைப் பூக்கள்....
தேன்தெளித்த காலங்கள்...கவலை...துன்பம்...
தெரியாத நேரங்கள்.....நெஞ்சில் இன்றும்
தோன்றிமறைகின்ற கணமெல்லாமே ஓர்
தூர வெளிப் பறவைகளாய்.....வட்டம் போடும்.
ஆனந்தபிரசாத்.
(1987 ல் நான் கனேடிய அரசாங்கத்தின்
அழப்பையேற்று அகதியாக இங்குவந்த நாளில்....
ஒரு கோடைகாலத்தில்
ருஷ்ய நாட்டைச்சேர்ந்த மூர்த்திகோவ்ஸ்கி அவர்களை
ஒரு பாதாளத்தில் (Metro) சந்தித்தேன்....
அப்போது அவர்கள் '' ஈழத்தமிழர் ஒன்றியம்''
என்கிற சுதந்திரமானஅமைப்பினால்
வெளியிடப்பட்டுக்கொண்டிருந்த ''தமிழ் எழில்'' என்கிற
சஞ்சிகையில்......
இலக்கியக்கனவுகளோடு தெருத்தெருவாக
அலைந்த நண்பன் பா. அ. ஜயகரன் என்கிற இன்றைய நல்ல
நாடகாசிரியனுடன்.....
(இரவிலே அது நடக்கும்..........காலையில் அது கிடக்கும்......)
என்னையும் சேர்ந்து அலையவைத்தார்.
அதன்பின்பு......''பார்வை'' சிறுசஞ்சிகை ஆசிரியர்
இன்றைய ''காலம்''செல்வம் அவர்கள்....
எல்லோரையுமே......
ஒன்றையும் உருப்படியாக செய்யவிடாது....
இயக்க அரசியல் தமிழ்ப்பணி செய்தன!?!?!?!?
நண்பர் மூர்த்திகோவ்ஸ்கி தூண்டுதலினால் எழுதியது இது.)
No comments:
Post a Comment