ஒரு நூலிழையில்
தவறவிட்டேன் உன்னை
பேசாமலே போய்விட்டாய்.....
இறந்தேன் இலேசாக...அன்று.
மீண்டும் முருங்கையில் ஏறினேன்...
வார்த்தைப்பிழையால்....மீளவும்
மயிரிழையில் இழந்தேன்!
காத்திருப்பின் சுகமும்
கனவுகளின் பாத்திரத்தில்
ஆத்மவிசாரத்தின் நறுனீர் அமைவில்...
இன்னொருமுறை
'ஆம்' என்றாய்!
இதமாக இறந்தேன்
காகம் பீச்சிய கதிரை மேசைகள்....
வியர்வை நாறும் வகுப்பறைகள்....
இன்றும் பவள மல்லிகைதான்!
நான் நிர்மாணித்த முதல் விமானம்
காகிதங்களாலானது
மெளனத்தை தவிர
வேறெதையும் நாம் பேசவில்லை!
வெடியும்...ஒசைகளும்...
பேரோசைகளும்.....அலறல்களும்.....
அற்ற ஒருநாளில்
வகுப்பறையில் நீ விட்டுச்சென்ற
(அல்லது வேண்டுமென்றே!)
இரசாயணவியற் கைநூல்
பக்கங்களுக்கிடையே
ஒரு மயிற்பீலியுடன் கிடைத்தது
கூடவே நான் நிர்மாணித்த
காகித விமானமும்......
அதன் பின்பு
எனது விமானம்
எங்கோ தரையிறங்கியது
ஒட்டுமொத்தமாய் இறந்தேன்!
ஆனந்தப்ரசாத்
No comments:
Post a Comment