Tuesday, November 18, 2014

முதலீடு

 

மனிதனுக்கும்
மனித நேசத்திற்கும் நடுவே
சமாந்தரமாக
இணை இரும்புகளில் பயணித்தது
குறுக்கறுத்த மரக்கட்டைகள்
ஆணிகளால் அறையப்பட்டிருந்தன
கதகதப்பும் விவரிக்க முடியாத
வாசனையும் அசெளகர்யங்களுமாய் 
ரயில் பயணங்கள்
எப்போதுமே சுகமானது
தண்டவாளங்களை
கணக்கின் இலக்கம் பிசகாது
இணைத்து வைக்கும் நேர்த்தி
பிடி தளராத பிணைப்பு
அங்குல நகர்வும் அனர்த்தங்கள்தான்
நீண்ட செவ்வக மரக்குத்திகளினிடையே
குறுணிக் கற்குவியல்
கருப்பு வெள்ளை தவிர்ந்த
வர்ணங்கள் காணாத வாழ்வு
பசும்புல் ஒருபோதும்
தலைகாட்டியதே இல்லை
விரைந்தோடிக்கொண்டேயிருக்கும்
புகையிரதம்
காதல் பிரிவின் விசும்பல்கள்
கணவன் மனைவி பிரிவினைகள்
விட்டு விலகிப்போகும்
சகல படித்தரங்களினூடு பாவும்
கொஞ்சம் அசிங்கமானாலும்
மலமும் சிறுநீரும்
தற்கொலை முயற்சிகளும்
தற்காலிக சினேகிதங்களும்
முகவரி பரிமாறல்களும்
தரிப்புகளின் நடுவே நிகழ்ந்த
தாக்குதல்களும்
மரணங்களும்
ஓசையற்றுப்போன ஓலங்களும்
இந்த மரபணுக்கள்
குறுணிக் கற்பரப்பினிடையே
எப்போதும்
சேகரித்து வைக்கப்பட்டிருக்கும்
புற்களின் எஞ்சிய
பசுமைப்புரட்சிகளும்
அறவே அழிந்தன
எது எப்படியானாலும்
நரை காணாத பருவத்தில்
நானும் சூட்டியும்
யானை 'மார்க்' சோடாமூடிகளை
தண்டவாளத்தில் அடுக்கிவைத்து
ரயிலின் ராட்சத சக்கரங்கள்
நசுக்கித்தரும் சில்லறைகளை
முதலீடாக்கி விளையாடினோம்
எள்ளளவும் பயமில்லாது
ஆனந்த் பிரசாத்
 
  • Vanitha Solomon Devasigamony ......தரிப்புகளின் நடுவே நிகழ்ந்த தாக்குதல்களும்
    மரணங்கள் ஓசையற்றுப்போன ஓலங்களும்
    இந்த மரபணுக்கள் குறுணிக் கற்பரப்பினிடையே

    எப்போதும்சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் புற்களின் எஞ்சிய
    பசுமைப்புரட்சிகளும் அறவே அழிந்தன;
  • Sriranjani Vijenthira அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்
  • Pathmanathan Nalliah Naavuk Arasan எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் இவர் பெயரையும் நான் அடிக்கடி குறிப்பிடுகிறனான். அந்த நாளில் ஆடலுடன் பாடலைக் கேட்டுத் தொடரில் இருந்து இரசிகனாகி விட்டேன் ..
  • Kiruba Pillai எல்லா அமுக்கங்களிலும் இந்த வரிகள் இறக்கை கட்டியது """ யானை 'மார்க்' சோடாமூடிகளை
    தண்டவாளத்தில் அடுக்கிவைத்து
    ரயிலின் ராட்சத சக்கரங்கள்

    நசுக்கித்தரும் சில்லறைகளை
    முதலீடாக்கி விளையாடினோம்""" எள்ளளவும் பயமில்லாது ..சூப்பர் கவிஞரே ..
  • Kiruba Pillai சவுகரியங்களும் ..துயரங்களும் இந்த கவிதைக்குள் ரயிலாக ஓடுகின்றன .
  • Sulaiha Begam ஞாபக ரயில்கள் ஊர்கின்றன....
  • குழந்தைநிலா ஹேமா தண்டவாளங்கள் வெறும் புகையிரத்தை மட்டும் சுமந்து கடத்தவில்லை நினைவுகளையும்தான்.எத்தனை நிகழ்வோடு சம்பந்தப்பட்டு தனித்துக் கிடக்கிறது பெருங்காடுவழி.அருமையான கவிதை.கடைசிப் பந்தி சின்னக்கால நினைவூரல்
  • Fathima Sharmila Jeinulabdeen · 6 mutual friends
    அழகு!!!!
    பொருத்தமான படமும் கூட....

No comments:

Post a Comment