1
சனிக்கிழமை.....
குறைந்தது ஒன்பது மணிவரையுமாவது படுக்கவேண்டுமென்று முயன்றாலும்
ஐந்தரை....ஆறு மணிக்குமேல் முடிவதில்லை.
பிரச்சனைகள் எழுப்பிவிட்டு விடுகின்றதேயன்றி நானாக
நினைத்தொன்றும் செய்வதில்லை.
எறும்பு மொய்த்தது போல் ஒன்றன்பின் ஒன்றாக ஆரம்பித்து
பின்பு மொத்தமாக ஒன்று திரண்டு மூளையைக் கடித்துக் குதறிக்கொண்டிருக்கும்.
இந்த மூன்று வருடக் கனடா வாழ்க்கையில் பிரச்சனை எறும்புகளின்
அன்றாட மேய்சல்.
நாற்பத்தியெட்டு வயதில் இப்படியொரு வாழ்க்கை.
இந்த 'பிரிட்ஜ்' வேறு சனியன். எந்த நேரமும் 'கிர்...கிர்...' என்று
சத்தம் போட்டபடி.....எரிச்சலாக வருகிறது.
இந்தக்காலையின் அழகையும், அமைதியையும் குலைத்துக்கொண்டிருக்கிறது.
எழுந்து போய் சுவருடன் சேர்த்து ஒரு தள்ளுத்தள்ளிப்பார்க்கிறேன்.
அப்போது முற்றாக நிற்காவிட்டாலும் கொஞ்சம் குறைந்திருக்கிறது. இதற்குமேலும் ஏதாவது செய்தால்
பின்புறமுள்ள 'கொம்பிரெசர்' உடைந்து 'பிரட்ஜ்' இற்குள்
இரண்டு கிழமையாக இருக்கும் கறிவகைகள் பழுதாகிவிடும்.
இந்த சனி, ஞாயிறில் அவற்றை ஒரு குழையல் போட்டு
சாப்பிட்டு முடிப்பதோடு இன்னும் இரண்டு கிழமைக்கு
புதிதாக எதாவது சமைத்துவைக்க வேண்டுமென்கிற எனது
திட சங்கற்பங்கள் எல்லாம் கூடவே உடைந்து நொருங்கிவிடும்!
என் அட்சய பாத்திரத்தை இனிமேலும் அலுப்புக்கொடுக்க
கூடாதென்று விட்டுவிடுகிறேன். இதில் இன்னுமொரு சிக்கலும்
இருக்கிறது. இந்தப்பெரிய 'ப்ரிட்ஜ்ஜை' அரக்கிக்கிரக்கி ஏதாவது
செய்யப்போக நாரிக்குள் பிடித்துவிட்டால்..... அவ்வளவுதான்!
திங்கட்கிழமை குமாருக்கு அவல்கிடைத்த மாதிரி!!! சும்மாவே
காரணமில்லாமல் 'வள்..வள்' ளென்று ஏறி விழுகிறவன், நான்
வேலைக்குப்போய் திங்கட்கிழமையுமதுவுமாக குனியவோ,
நிமிரவோ ஏலாமல் சிரமப்பட்டால் உலுக்கியெடுத்துவிடுவான்.
கடந்த ஆறுமாத காலமாக இந்தக் குமாரோடும் இவனது சகாக்களோடும்
.....எல்லோருக்கும் என்னில் பாதிவயதுதான்!.....
பட்டுவரும் அவஸ்தைகளும் மன உளைச்சல்களும் கொஞ்ச நஞ்சமல்ல.
சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு இந்த குமார்
கனடாவுக்கு விமானமூலம் வந்தான்.
கூட வந்தவர்கள் எல்லோரும் 'பிளேனை' விட்டு இறங்கிவிட்டார்கள்.
இவன் மட்டும் மிதந்தபடி நேரே இந்த 'பாக்டறிக்குள்' வந்து வேலைக்குச் சேர்ந்து
ஏற்கெனவே புளிப்பேறின தலைக்கு 'போர்மென்' என்கிறதான
தொப்பியை வேறு போட்டுவிட பிள்ளைக்கு தலைகால் தெரியாமல் போனதில் தான் இந்த 'வள்....வள்....'
இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு மிதந்துகொண்டேயிருப்பான் என்பது எனது கணிப்பு.
இதென்ன....? ஐந்து நாட்களும் இவனுடன் அலுப்புப்பட்டுவிட்டு
இந்த சனிக்கிழமை விடுமுறை நாளிலும் இவனையே நினைத்துக் கொண்டு?
ஒருவாறு காலைக்கடன்களை முடித்துக் கொண்டு
வெளியே போக ஆயத்தமாகிறேன். ஜன்னலை திறந்து
பார்த்ததில் வெளியே குளிரில்லை சும்மா 'க்ஷேர்ட்' டோடு
போகலாம் போல் தெரிகிறது. 'பாங்க்' கிற்குப் போய் பின்பு
'ஜான்ந்தலோன் மார்க்கெற்றில்' காய் கறி....அதன்பின்பு 'செயின்ற்
லோரன்ட்' இல் இறைச்சி. திட்டம் போட்டாயிற்று. எனக்கு இரண்டு
வாரங்களுக்கொருமுறை சம்பளம் தருவதால் ஒவ்வொரு இரண்டு
வாரங்களின் இறுதியில் இந்த அவஸ்தை.
'நாம்மியூர் மெத்ரோ' வைப்பிடித்து 'ஜான்ந்தலோனில்' இறங்கிய
போது ரமேஷ் எதிர்ப்பக்கமாக நடந்து வந்து கொண்டிருந்தான்.
இன்றைக்கு 'ஓவர் டைம்' செய்ய வேண்டுமென்று நேற்றுச் சொல்லிக்கொண்டிருந்தான்.
இப்போது இங்கே நிற்கிறான்? ஒருவேளை போகவில்லை போல!
ஒரு காதில் கடுக்கனும், பிடரியில் சிறிய குடுமியமாய்.....'ஹாய்'.....
நான் பேசாமல் கையைக்காட்டிவிட்டுப் போய்க்கொண்டிருக்கிறேன்.
இந்த 'ஹாய்' உட்பட இன்னுமொரு நாலைந்து வார்த்தைகளுடன்
இவன் ஆங்கில அறிவு முற்றுப் பெற்றுவிடுகிறது.
எனக்கு மாத்திரம் இந்த ஆங்கில அறிவும் இல்லாது போயிருக்குமானால்
என்னை நாய் கொண்டு போயிருக்கும்.....!
இவன்கள் என்னை வைத்து 'பேஸ்பால்' ஆடியிருப்பான்கள்.
ஒரு வழியாக 'செயின்ற் லோரன்ட்' வந்து சேர பன்னிரண்டு மணி
ஆகிவிட்டது. இறைச்சிக் கடையிர் எகப்பட்ட சனம். வழமைபோல
அநேகமான தமிழ் முகங்கள். பாலன் கையில் இரண்டு 'வீடியோ
கசெற்' றுகளுடன் நின்று கொண்டிருந்தான். அது என்ன 'வீடியோ'
என்பதும், அவன் ஏன் 'செயின்ற் லோரன்டில்' அலைகிறான் என்பதுவும்
'பாக்டறி' முழுவதும் பிரசித்தமான விஷயம்.
பகல் சாப்பாட்டு இடைவேளையின் போது பக்கத்து மேசையில்
இருந்து கொண்டு எனக்குக் கேட்காதென்று நினைத்துக்கொண்டு
குமாரும், இவனுகளும் கூடிக் கூடி நேற்றிரவு பார்த்த 'புளூபில்ம்'
பற்றிச் சிலாகித்துப் பேசுவதைத்தான் தினமும் கேட்கிறேனே?
எனக்கு எதுவும் கேட்கவில்லையென்பதாக காட்டிக்கொள்வதற்கு
நான் படும் பிரயத்தனங்கள் கொடுமை. எனக்கும் கேட்கிறதாக இவன்களுக்குத் தெரிந்தாலோ
இருக்கிற கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விடும்.
பிறகு எனது 'செக்ஸ்' அனுபவங்களைப் பற்றி பேட்டி காணவும்,
'மாடர்ன் டெக்னாலஜி' பற்றி போதிக்கவும் ஆரம்பித்து விடுவான்கள்.
'' என்ன மாஸ்ரர், இறைச்சி வாங்க வந்தனியள் போல''
வழிந்து கொண்டு கேட்கிறான் பாலன்.
'பின்ன என்ன இருபத்தி ஐந்து சதத்தை போட்டு ஓட்டைக்குள்ளால்
விடுப்பு பார்ப்பதற்கே வந்தனான்?' என்று எரிந்து கொண்டே
மனதிற்குள் சொல்லிக் கொண்டாலும் வெளிக்கு ''ஒமோம்.....''
என்பதோடு வெட்டிக்கொண்டு, வெட்டி முடித்த இறைச்சியையும்
பெற்றுக்கொண்டு வழமை போலவே ஒரு சிறிய 'பலன்ரைன்ஸ்'
விஸ்க்கிப் போத்தலையும் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர
மூன்றரை மணியாகி விட்டது.
2
ஞாயிற்றுக் கிழமை.
ஒன்பது மணிவரையும் நிம்மதியாக தூங்கி
எழும்ப முடிந்தது 'பலன்ரைன்ஸ்' உடைய புண்ணியத்தில்.
பிரச்சினைகள் எதுவும் பெரிதாகப் பாதிக்காது, மூளை கொஞ்சம்
சுகமாக இருக்கிறது. முகம் கழுவலாமென்று போனால்.......
குளியலறையைக் கொஞ்சம் சுத்தம் பண்ணவேணும்.
துவைப்பதற்காக ஊறப்போட்ட உடுப்புகள் இரண்டு நாட்களுக்கு மேலாக இழுபடுகிறது.
துவைத்துவிட்டால் நாளைக்கு வேலைக்குப் போட்டுக் கொண்டு போகலாம்.
இல்லையேல் நல்ல உடுப்புகளை அணிந்து கொண்டு போய் வேலை செய்யும் போது
எதிலாவது மாட்டிக் கிழிந்து போய் விடுமோவென்று பயந்து,
நெளிந்து கொண்டிருக்கும் போதில் முதுகிற்குள் கொளுவிப்
பிடித்து விடும். பிறகு பெட்டி தூக்கும் போது வலிக்கும்.
மெதுவாக வேலை செய்தால் குமார் குளறுவான்.
முன்பும் ஒருக்கா இப்படி நடந்து குமார், ரமேஷிடம் சொல்லிக் கொண்டிருந்ததை
என் காதுபடக்கேட்டபோது வாழ்க்கையே வெறுத்து விட்டது.
''மச்சான் உந்தக் கிழடுகள் எல்லாம் ஊரில 'பென்ஷன்' காசோட
கோயில், குளமெண்டு இருக்காமல் காசுக்கு அவாப்பட்டு இஞ்சை
வந்து பெரிய உபத்திரவம்......''
அப்போது தான் எனக்குள் எனது நாற்பத்தியெட்டு சாதுவாக
உறைத்தது. பாதியாய் நான் செத்ததும் அப்போதுதான்.என்னுடைய
பதினெட்டு வருட ஆசிரியத் தொழிலில் ஒரு மாணவனையாவது
கை தொட்டோ, பிரம்பாலோ அடித்திருக்க மாட்டேன். இவன்
சொற்களால் என்னை உடைத்துவிட்டான். அந்த நாட்களில்
'சோக்கட்டி' யைத் தவிர வேறெதையும் தூக்கியறிய மாட்டேன்.....
என்றெல்லாம் மனதிற்குள் புழுங்கிப் புலம்பிக் கொண்டிருந்தேன்.
'இதேன் இந்த வில்லங்கம்......?' என்று முணுமுணுத்துக்கொண்டே
தோய்த்து முடித்து, ஒரு அம்சமான குளியலும் முடித்துவிட்டு
வெளியே வந்ததில் உடலுக்கும், மனதிற்கும் ஒரு சாந்தி கிடைத்தது போன்ற உணர்வு.
நாளைக்கு வேலைக்குப் போய் முறிவதற்கான தெம்பு வந்து விட்டது.
இதோடு இன்னும் ஐந்து நாட்களை ஓட்டிவிடலாம்.
ஞாயிற்றுக்கிழமை ரொம்பவும் அமைதியாக மன உளைச்சல்கள் எதுவுமின்றிக் கழிந்து போகிறது.
3
திங்கட் கிழமை.
காலை நேரத்துப் பரபரப்புகள் எதுவும் எனக்குக்கிடையாது.
வழமையே போல் ஆறுமணிக்கு எழுந்திருக்கிறேன்.
ஜன்னலை திறந்து பார்த்தால் வெளியே மழைக்குணமாகத்
தெரிகிறது. கனடாவின் கால நிலை தமிழ்நாட்டு
அரசியல்வாதியைப் போல. அரைமணி நேர 'பிறேக்' கிற்குள்
சாப்பிடக்கூடிய மாதிரி நாலு துண்டுப் பாணுக்கு நடுவே
எதையோ அடைத்துக்கொண்டு தோளில் கொளுவிக்கொண்டு
போகும் பையில் வைக்கிறேன்.
''இந்த வயதிலையும் 'ஸ்கூல்' பெடியன் மாதிரி மாஸ்ரருக்கு
ஒரு 'ஸ்ரைலான பாக்' என்று முன்பு ஒருநாள் இந்தப் பை
வாங்கிய புதிதில் பாலன் நக்கலடித்தது இன்னமும் காதில்
கேட்டுக் கொண்டிருக்கிறது. நெஞ்சுக்குள் 'சுருக்' கென்று
தைத்தாலும் வெளியே சேர்ந்து சிரித்து மழுப்பி விட்டேன்.
இந்த ஊர்க் கிழடுகள் அரைக்காற் சட்டையும், 'சண்கிளாசும்'
போட்டுக்கொண்டு போனால் இவனுகளுக்கு அது ஒரு பிரச்சினை
இல்லை.
சரியாக எட்டுக்குப் பத்து நிமிடம் இருக்க 'பாக்கரறிக்குள்'
நுழைந்து 'காட் பஞ்ச்' பண்ணிக் கொள்ளும்போது.................
''குட் மோணிங்....மாஸ்ர்''
வெலவெலத்துப் போய்.....என் காதுகளையே நம்ப முடியாதவனாக
திரும்பிப் பார்த்தால்......குமார்!
இப்போது என் கண்களையும் ஏன் என்னையும் நம்பமுடியவில்லை
இதென்ன 'ஓவர்நைற் ரெவல்யூஷன்' இந்த ஆறு மாத வரலாற்றிலேயே இல்லாத ஒரு வரவேற்பு!
நானொரு 'கொர்பச்சேவாகவும்' அவன் ஒரு 'ஜார்ஜ் புஷ்' ஆகவும்
எனக்குப் பட்டது.......புல்லரித்துப் போனேன்...மேனி சிலிர்த்தது.....!!!
இதை விடவும் பல அதிசயங்கள் இன்றைக்கு நடக்கவிருப்பதை
அனுமானிக்கும் திராணியற்றும் போனேன்.
பத்து மணி 'ப்ரேக்' கிற்று 'பெப்சி' வாங்கித் தந்தான்.
பாலன், ரமேஷ், அங்கிருந்த இயந்திரங்கள், நான் தூக்கி அடுக்கும்
பெட்டிகள்.....எல்லோருக்கும் பரம ஆச்சரியம்!
பிறகு இன்று முழுவதும் என்னைப் பெட்டி தூக்கவே விடவில்லை
எல்லாவற்றையும் தானே செய்தான். என்னை அவைகளை
எண்ணிக் கணக்குப்பார்த்து 'பில்' தயாரிப்பதை மட்டும் செய்யச்
சொல்லி அன்போடு பணித்துவிட்டும் போனான். இதென்ன?
இந்த தமிழ் படங்களில் வில்லன் செய்யாத அநியாயமெல்லாம்
செய்துவிட்டு கடைசி 'ரீல்' முடியக் கிட்டவாக திடீரன்று திருந்தி
நல்லவனாகி விடுவதோடு உதிரியாக ஒரு 'டயலாக்' கும்
பேசுவானே.....அது போலக் குமார் நடந்து கொண்டான்.
இன்று முழுவதும் நான் மிதந்து கொண்டிருந்தேன்.........
கால்கள் தரையில் பாவவில்லை.
மாலை நான்கு மணி. வேலை முடிய இன்னும் அரை மணிநேரம் இருக்கிறது.
உடல் கொஞ்சம் களைத்திருந்தாலும் மனம் என்னவோ உற்சாகமாகவே இருக்கிறது.
குமார் குழைந்த குழையலைப் பார்த்து பாலனும், ரமேஷும்
என்னுடன் பேரன்பு பூண்டனர்.
ஏதோ நல்லது நடக்கட்டும் என்று நான் எண்ணிக்கொண்டிருந்த
போது.....குமார் வந்து
''மாஸ்ரர்....ஒரு நிமிசம் உங்களோட கதைக்கலாமோ?''
என்று சொல்லிக் கூட்டிக்கொண்டு சாப்பாட்டு அறைக்குப் போனான்.
மற்ற நாட்களில் வேலை நேரத்தில் அவசரமாக ஒன்றுக்குப் போனாலே
'' ம்..ம்...ம்... சலரோகக்காரரையெல்லாம் வேலைக்கு வைத்துக்கொண்டு நான் படுகிறபாடு?''
என்று புறுபுறுப்பவன், இன்று..........சரி.....சரி......விடு.......
எல்லா நேரமும் ஒரு மனுஷன் ஒரே மாதிரியாகவா இருப்பான்?
என்று என்னை நானே திட்டிக்கொண்டும், இவன் ஏதோ ஒரு
முக்கியமான விடயம் என்னுடன் பேசப்போகிறான்....என்பதை
அனுமானித்துக் கொண்டும் அவன் கூடப் போகிறேன்.
''மாஸ்ரர்....நீங்கள் எனக்கு ஒரு பெரிய உதவி செய்யவேணும்.....
செய்வியளே....?''
''என்ன எண்டு சொல்லும் தம்பி.....என்னால ஏலுமெண்டால்
கட்டாயம்....''
..................சிறிது நேரத் தயக்கத்தின் பின்பு......
''மாஸ்ரர்....எனக்கு 'இமிக்ரேசன்' இல இருந்து 'இன்குவயரி' க்கு
வரச்சொல்லி 'அப்பொயின்மன்ற் லெற்றர்' வந்திருக்கு. அதில
ஊருப்பட்ட 'போம்' நிரப்ப வேணும்...அதோட என்னர 'கேசும்'
எழுதித் தந்து நீங்கள்தான் உதவி செய்ய வேணும்....மாஸ்ரரை
கஷ்டப்படுத்திறனோ தெரியேல்ல....நீங்கள் படிச்சனீங்கள்......
கட்டாயம் வடிவாய் நிரப்பித் தருவியளெண்ட நம்பிக்கையில தான்
மாஸ்ரர் உங்களிட்டைக் கேட்கிறன்....'' என்றான்.
கொஞ்ச நேரம் எனக்கு என்ன செய்வது, சொல்வது என்றே தெரியவில்லை.
இதுநாள் வரை இவன் என்னுடன் நடந்து கொண்ட எல்லாவற்றுக்கும், இப்போது இவன் பேசியது
என் ' ஈகோ' வைத் திருப்திப்படுத்தியதாகவே எனக்குப்பட்டது.
பிறகு இப்படி நான் நினைப்பது அற்பத்தனமானதென்று
எனக்குள் உறைக்க ஆரம்பித்தது. சின்னப்பெடியன்.
இவனுடைய எதிர்காலமே இதில்தான் அடங்கியிருக்கிறது......
நான் மிகவும் பொறுப்பாக இதைச் செய்து கொடுக்கவேண்டும்.....
''என்ன மாஸ்ரர் யோசிக்கிறியள்?''
''இல்லை தம்பி....இன்றைக்குத் திங்கட்கிழமை. நல்ல நாள்.
வேலை முடிய அப்பிடியே என்னுடைய வீட்டபோவோம்......
தம்பிக்கேதும் வேற அலுவல் இருக்கே?''
''இல்ல மாஸ்ரர்....இதைவிட வேற என்ன வேலை?
அப்பிடியே 'கார்' இல போவம்....''
..........................மனது மிகவும் இலேசாகியிருந்தது.
ஆனந்தபிரசாத்.
***
''காலம்'' சஞ்சிகை இரண்டாவது இதழில்
(1991) ''நாட்குறிப்பு'' என்ற தலைப்பில் வெளிவந்து
என் அபிமானத்திற்குரிய எஸ்.பொன்னுத்துரை ஐயாவும்
இந்திரா பார்த்தசாரதி அவர்களும் இணைந்து தேர்ந்த
''பனியும் பனையும்'' (1994) பூகோளத்தின் நாலாபுறமும்
சிதறிப்போன ஈழத்து சிறுகதைஞர்களின் தொகுதியில்
மீளப்பிரசுரமானது. எஸ்.பொ. ஐயா அவர்களால்
''அவர்நாண....'' என்று மீள்தலைப்பு தரப்பட்டது.
எனக்கு நானே சிலாகித்துக்கொள்கிற
சில பெருமைகளில் இதுவும் ஒன்று.
ஆனந்த் பிரசாத்.