Thursday, October 18, 2012

முதுமை..... (அல்லது வாழ்வின்மீதான இரண்டாவது காதல்!)

 


இந்த நாட்களில்
மழை
என்மீது நிர்பந்திக்கப்பட்டது
அழகுதான்.....
உலகப்பரப்பின்
அவலங்களுக்காய்
உணர்ச்சிவசப்பட்டு....
ப்ரபஞ்சம் உதிர்ந்து கழிக்கின்றது
பருவநிலை மாற்றங்கள்
பால்யத்திற்கு சரி......
தண்மை அடர்ந்த
ஒரு தருணத்தில்.....
சற்றும் எதிர்பாராமல்....
வாழ்வை முத்தமிட்டேன்...
அவள் உதடுகளில்
ஆத்மாவை
உறிஞ்சித் தீர்க்கும் அளவுக்காய்!
ஆழ்மனத்தே....
சரக்கு ரயில் சக்கரங்கள்
தண்டவாளம் அதிர...
படு வேகமாக...
அவளோ....
எதிர்க்கவுமில்லை.....பின்
நிராகரிக்கவுமில்லை
மழையோ
தேர்ந்த இசையின்
ஸ்வரப்ரஸ்தாரங்களாய்
நாலாபுறமும் வீசியடிக்கிறது
தண்ணுமைக் கலைஞனின்
லய வின்யாசங்களாய்
இடியுடன் கூடவே.....
கறுத்துக் கிடந்த மேகங்கள்
கச்சேரி முடிந்ததும்
வெளுத்தே வெளுத்தன
மெதுவாக அவளிடம் கேட்டேன்
''என்மீதான உனது அங்கீகரிப்பை.....
நான் துஷ்பிரயோகித்தேனா?
வயதை மீறிய என் செயல்
உன் இளமையின்
உயிரைப் பறித்ததா?
ஆம்...என்னில்
என்னை மன்னித்துவிடு''
அவள் முறுவலித்தாள்.....
பின்......
''நீயொன்றும் உடற்சூட்டின்
அங்கஹீனங்களால்
இயங்கவில்லை
உனக்கானதே உன் வாழ்வு''
சமாதானமானேன்!
மனமோ.....
நீர்த்த பஞ்சுப்பொதியாய்
மீண்டும் மேகமானது!
ஆனந்தப்ரசாத்.

 
  • Narayana Moorthy முதுமை.... நான் எழுதியிருக்க வேண்டுமே இதை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது... மழை - நீர் - கவிஞர்.
  • George Singarajah அருமையான அழகான கவிதை ...ONLY POET CAN EXPRESS IN THIS WAY ...WONDERFUL WAY.
  • Thiru Thirukkumaran அவள் முறுவலித்தாள் மனமோ.....
    நீர்த்த பஞ்சுப்பொதியாய்
    மீண்டும் மேகமானது!//
  • Gowry Sivapalan அழகான வரிகள் ஒரு காட்சியை கண்முன்னே நிறு த்தியது. மழையின் ஓசை காதினுள் கேட்கிறது . வாழ்த்துகள்
  • Rajaji Rajagopalan ---
    மனம், சரக்கு ரயில் சக்கரங்கள் தண்டவாளம் அதிர ஓடுவதுபோல் அதிர்ந்தாலும் முதுமை வாழ்வை முத்தமிடும்போது அதன் ஆத்மாவை உறிஞ்சித் தீர்க்கும் அளவுக்கு ஆக்ரோஷமாய் இருந்தது. வெறும் முத்தமா அது?

    ...........
    தேர்ந்த இசையின்

    ஸ்வரப்ரஸ்தாரங்களாய்
    நாலாபுறமும் வீசியடிக்கிறது
    தண்ணுமைக் கலைஞனின்
    லய வின்யாசங்களாய்
    இடியுடன் கூடவே....

    முதுமைக்கே உரிய பொறுமையும் ஆதங்கமும் மற்றவர்கள் மீதான மதிப்பும்,

    ''என்மீதான உனது அங்கீகரிப்பை
    நான் துஷ்பிரயோகித்தேனா?
    வயதை மீறிய என் செயல்
    உன் இளமையின்
    உயிரைப் பறித்ததா?
    ஆம்...எனில்
    என்னை மன்னித்துவிடு''
    எனச் சொல்கிறது
    ஆனால் வாழ்க்கையின் பதிலோ,
    'நீயொன்றும் உடற்சூட்டின்
    அங்கஹீனங்களால்
    இயங்கவில்லை
    உனக்கானதே உன் வாழ்வு''

    இதற்குமேல் என்ன ஆதாரம் வேண்டும்? முதுமையில்தான் வாழ்வின்மீது உண்மையான காதல் உண்டாகிறது.

    கைதேர்ந்த கலைஞன் கையினால் உருவாகிறது விக்கிரகம்; வணங்காமலிருக்கு முடியுமா?
  • Anand Prasad முதுமையில்தான் வாழ்வின்மீது உண்மையான காதல் உண்டாகிறது.
    Thank you Rajaji Rajagopalan!!!
  • Rajaji Rajagopalan நாமெல்லோருமே ஒவ்வொரு விநாடியும் முதுமையை நோக்கி ஊர்ந்துகொண்டிருக்கிறோம். சிலர் விரைவாக, சிலர் நிதானமாக. வேகம் எப்படியிருப்பினும் வாழ்வின் மீது கொள்ளும் காதல் வயது ஏற ஏற இன்னும் கூடிய அர்த்தமுள்ளதாகிறது. இதனையே நீங்கள் கவிச்சுவையொடு சொல்லப் புறப்பட்டீர்கள். ஒரு மனிதன் தன் வாழ்வின்மீது எத்தனைமுறை காதல் கொள்கிறான் என்பதை அவனே கூறமுடியாது. ஆனால் அவன் வாழ்வின் இறுதிக் காலத்தில்தான் அதன்மீதான உண்மையான காதலை முழுமையாக உணர்கிறான். அதுவே வாழ்க்கையின் மீதான இறுதிக் காதல். என் இறுதி நாட்களில் அக்காதல் அனுபவம் எப்படி இருந்தது என ஒரு வரியாவது எழுதி வைக்கவேண்டுமென விரும்புகிறேன். நன்றி, Anand Prasad.
  • Vj Yogesh //'நீயொன்றும் உடற்சூட்டின்

    அங்கஹீனங்களால்

    இயங்கவில்லை


    உனக்கானதே உன் வாழ்வு''//
  • Solomon Vanitha Devasigamony தண்மை அடர்ந்த
    ஒரு தருணத்தில்.....
    சற்றும் எதிர்பாராமல்....
    வாழ்வை முத்தமிட்டேன்...

No comments:

Post a Comment