தேசாபிமானம்...நாட்டுப்பற்று.....இவைகளைப்பற்றி!
நிலவு இங்கே வற்றிப்போய்விட்டது
ஒளி வெள்ளம் வடிந்து போய்...
யாரிங்கே கண்ணால் பார்த்தார்கள்?
மாமாங்கமாகிவிட்டது!
நான் புறப்பட்டு வந்தது
வெளிச்சத்திற்காக....
பகலில் சூரியனையும்
இரவில் சந்திரனையும்
மட்டுமே நம்பிக்கொண்டு
தெள்ளோட்டிக்கொண்டிருக்கும்
ஒரு தேசத்திலிருந்து
நான்
தப்பித்துக்கொண்டு வந்தது
அமாவாசை நாட்களில்
ஊரைக்கொளுத்தி
ஒளி கொடுக்கும் இராணுவத்திடமிருந்து
நான்
பிரியாவிடை பெற்று வந்தது
மரணம் வாங்கவென்று
கூப்பன் புத்தகத்தோடு
வரிசையில் காத்திருக்கும்
மனிதர்களிடமிருந்து....
ஆக....நான்
இழந்துவிட்டு வந்தது
தேர்தல்களை மட்டுமே
அதனாலென்ன...
யாராவதொருவன்
எனது வாக்கை போட்டிருப்பான்...
வாக்குரிமை மலிந்த தேசமாயிற்றே?
செத்துப் போனவனும்
எழுந்து வந்து வாக்களித்துவிட்டு
மறுபடியும்
செத்துப்போவான்
சாம்பர் மேட்டிலும்
ஜனநாயகம் சுடர்விடும்
ஜன்ம பூமி.....
எந்த தேசிய
கொடிகளைப் பார்த்தாலும்
என்னை அறியாமல்
எழுந்து நிற்கிறேனே.....போதாதா?
எந்த தேசிய
கீதங்கள் கேட்டாலும்
எண்சாணுடம்புக்குள்
ஏதேதோ செய்கிறதே...
பற்று......பற்று.....
எனக்கு எந்த கடவுளும்
எந்த கடவுச்சீட்டும்
ஒன்று தான்
ஒன்றே குலம்
ஒன்றே புலம்
ஒன்றே மலம்
ஒன்றே சலம்
நானொரு தேசங்களின்
அபிமானி
எனக்கு நானே
விச்வாமித்ரனாகி
எனது கமண்டலத்திலிருந்து
சபிக்கப்பட்ட தண்ணீரை
எனது தலையிலேயே
தெளித்து.......
ஆனந்தபிரசாத்.
No comments:
Post a Comment