தேடல்
by Anand Prasad on Sunday, August 12, 2012 at 11:03pm ·
இன்னும் கொஞ்ச நாள் தான்
இருந்து விட்டால் போதும்
மாற்றி விடலாம்!!!
வேர்களுக்கு சுவாசம்
வேண்டியிருக்கிறது
பிரம்மச்சரியத்தைப்
பிடித்தெல்லாம் போதும்
வெளிறிப்போய் இருந்தாலும்
வேர்கள் அழகானவைதான்
பூக்கள் சில நாளைக்கு
நீரை உறிஞ்சட்டும்
மண்ணுக்கு இப்போது
மலடு தட்டிப் போகிறது
குழந்தைகளின் பிறப்பு
கொஞ்ச நாள் நிற்கட்டும்
இழந்து விட்ட காற்றின்
இருப்பை கணக்கெடுப்போம்
பூமிக்கும் ஈர்ப்பு
புளித்துப் போயிருக்கலாம்
வெப்பத்தை நெருப்பு
விவாகரத்து செய்து விட
ஆகாயப் படுக்கை
அலங்கோலமாயிற்று
நிர்க்கதியாய் நிலத்துக்கு வந்த
வெப்பத்தைத் தாங்க
மனித தோலில்
ஆடை கொள்ள
ஆடுகள் கூட அஞ்சுகின்றன
பிரமாண்டமான ஆலைகளின்
பீரங்கிகளில் வழிந்த
மனித மூத்திரத்தை
மேகம் களவெடுக்க
உலகம் மீட்டதில்
அமிலக் குளியல்
பஞ்சத்தில் அடிபட்டு
பூதங்களுக்குள் யுத்தம்
எஞ்சியதையும் அழிக்க
ஆதி சிவன் ந்ருத்தம்
தந்திரத்தின் உச்சத்தில்
தனித்துவிட்ட மனிதம்
அந்தரத்தில் போகையிலே
அற்றுவிடும் புனிதம்
ஈர்ப்பை விட...பூமிக்கு
உயிர்ப்புத்தான் தேவை
அண்ணாந்து தேடியதில்
ஆனதொன்றும் இல்லை....அதால்
பூமியைப் பிளந்து
புகுந்து தேடுவோம்
எங்காவதொரு வாழ்வு
இருக்கும்.....நிச்சயமாய்!
ஆனந்தபிரசாத்.
No comments:
Post a Comment