நதிகளின் பாதை வழியே
பயணம்...பயணம்...பயணம்
நாளும் நாளும் மன வெளியில்
சலனம்...சலனம்...சலனம்
ஸ்ருதியில்லாத வெறும் பாடல்
ஸ்வரமில்லாத இசைத்தேடல்
சுகங்களை தினம் அணைத்திட தவிக்கும்.....
உறவுகளெனும்.....
(நதிகளின்...)
எனதுயிரணுக்களிலே
இசையானாய் நீ...
எனதுணர்வுயிர் ஊறியே
மகனானாய் நீ....
தினமொரு மழலையின் பொழுதுகள்
தீட்டிய நாட்களின் கவிதைகள்
என்னைவிட்டு எங்கேயோ
ஏகாந்த பெருவெளியில்
மின்னலென மறைந்தோடும்
மயக்கமென்ன.......
(நதிகளின்)
நீரலை மீதொரு தாமரை
இலையினைப்போலொரு வாழ்வு
நீ இல்லை என்பது என்வரை
நெஞ்சினிலே பெரும் ஆய்வு
நாட்களிலே குற்றமில்லை
நானொருவன் பட்ட நிலை
கேட்பதற்கும் காண்பதற்கும்
குரலில்லை உரு இல்லை
என் மகனே....
பனிவழி பழகிய தேசம்
பகலிரவாகிய நானும்
தனிவழி போகிற போக்கில்
தயக்கமென்ன......
மயக்கமென்ன......
(நதிகளின்)
(இந்த இசைப்பாடல் உயிர் வேரறுந்து
எங்கேயோ ஒரு முகாமில் உறவிழந்து
நொந்து கிடக்கும் தந்தையாகிய என்
மதிப்பிற்குரிய கவிஞனுக்கு.....)
ஆனந்தப்ரசாத்.
No comments:
Post a Comment