புவியீர்ப்பில்லை....எனில் நான்
பறந்திருப்பேன்.....மிதந்திருப்பேன்!
புனிதத்தின் உச்சங்களை
தொடுகையிலே வியந்திருப்பேன்!
கவி....நீர்த்துப்போயிருக்கும்.....
கவலைகளும் கூடவே.....
கனலோச்சும் வெம்மைகளில்
கதறியழ வேண்டாமே....
அவிழாத மருக்கொழுந்தின்
ஆழ் மணத்தை துறந்திருப்பேன்
ஆதார சுருதியற்ற
ஒசையென நிறைந்திருப்பேன்
தவியாமல் தவிக்கின்ற
தாளாண்மை தள்ளியொரு
தனியாளாய் ககனவெளி
திமிரோடு நின்றிருப்பேன்......
வேரூன்றிப் போய்விட்ட
பாட்டியும் முப்பாட்டனதும்
வீரியங்கள் உரமாகி
விகசித்து....நான் பிறந்த
பாருக்குள் கால்பதித்த
பலமென்ற போர்வைக்குள்
பதியங்கள் கொண்டதொரு
பரிணாம வீச்சினுள்ளே
ஊர்கண்டு.....உயிர்கண்டு....
உற்றார் உறவுகண்டு....
உன்னதங்கள் தான்கண்டு....
உயிர்ப்பில் களித்திருக்க.....
யார் கண்டார்...? ஈர்ப்பில்
யாக்கையுமோர் பணயமென
ஆகுமென.....? வேற்றுலகில்
ஆறுமொரு பயணமென?
ஆனந்தப்ரசாத்
No comments:
Post a Comment