ஆறாம் பராயத்தில் ஆசையெழும்!....பால் மணமே
மாறா முகத்தில் பயிர்விளைக்க! மீசையொடு
தாடியென.....எந்தன்
தந்தையிடம் திருடிக் கண்ணாடியிலே...
'கமலின்' காட்சிப்படம் தெரிய....
வருத்தி....வருந்தி... வழித்ததனால் ஏதுமொரு
விருத்தியும் அன்று விளைந்ததில்லை!
அதுவாக....
ஏழாண்டின்பின் மெல்ல என்தவமாய் எட்டியது
காளான் குடையோடு காற்சட்டைக் குள்ளிருந்து
விடுதலை தேர்ந்த வீரியக் கூடாரத்தால்
கடுகதியில் மேலும் அரைக் காற்சட்டை அணிதலென
நிர்ப்பந்தமாயிற்று!
நீண்டு சில காலங்கள்
அர்த்தமே இல்லாது அபத்தமும்... அசட்டுத்
தனங்களும் வெருளித் தன்மைகளும் அகலாத
கணங்கள் ஒவ்வொன்றும் கனவாக.....வாழ்வில்
முழு வாலிபம் வந்து முட்டியது.....இன்பத்தை
தழுவாது போய்விடுமோ....
தளிர்ப்பின் தாற்பர்யம்
எழுவானின் பரிதியென ஏறிவர...ஆசைகளோ
பழுதான கடிகார படபடப்பாய் ஒடுங்கின.
தருணங்கள் வாழ்நாளின் தலையில்
வகிடெடுக்க...
வருநாட்கள் செலவோ...வரவுகளோ இல்லாது
தேச வரைபடத்து தெருக்களாய் கிளைத்தன
ஆசைப் படகோ...அகப்பட்ட நீர்ப்பரப்பில்
திசைகாட்டி இல்லாதே தியங்கி
மனவெளியில்
இசைபாடி...வசைபாடி...இயலாமை தேர்ந்தவொரு
வரைகோட்டில் நகரும்!
வழமைபோல்...கேசத்து
நரைகூடும்... அப்பனிடம் நான் திருடி என்னழகை
செப்பனிட முயன்ற செயல்களெல்லாம் அகத்தை
கப்பியபடி நெஞ்ச கல்லுருக்கும்!!!
இனிமேலும்.....
எஞ்சி இருக்குமென் இளஞாயிறின் காலம்
மஞ்சம் நிறைந்த மலர்.
பின்குறிப்பு:
இப்போது என் பேரன்
இல்லாத மீசையை
மழிக்கும் எத்தனத்தில்
மகிழ்ந்து போகிறானாம்!!!
ஆனந்தப்ரசாத்.
No comments:
Post a Comment