கனவுகளும் நிஜங்களும்
புணர்ந்து கொள்கையில்
நம்பிக்கைகளின் பிரசவம்
கணக்கு வழக்கின்றி...
முன்னொரு போதில்
இவை
தேர்தல் வாக்குறுதிகளாகவே
அறியப்பட்டிருந்தது...
ஜனநாயகியோடு
படுக்கையை பகிராதவரில்லை!
போனவன் வந்தவனெல்லாம்
பெற்றுத்தள்ளிவிட்டு போனான்.....
தலை ஒன்றுக்கு
மூளை இன்னொன்றுக்கு
வயிறு வேறொன்றுக்கு
அதன்கீழ் ஏதோவொன்றுக்குமாக....
குழந்தைகளோ....
பல்வேறு தேசங்களில்
பல்லின மக்களாயின....
நோய் முற்றித்தளர்ந்த
விபசாரி
வீதிக்கு வந்தாள்
பிச்சைக்காரியானாள்....
ராஜ்ய பரிபாலினி
ராப்பிச்சையானாள்
புடவை கிழிசல்களுக்குள்ளால்
தசைப்பகுதி தெரிந்தது.....
எஞ்சிய அரசியல்வாதிகளும்
இடியாப்பம் வாங்கிக் கொடுத்துவிட்டு
இன்பம் அனுபவித்து போனார்கள்....
வயித்தெரிச்சலில்
இப்போது
பைத்தியக்கார
ஆயுதபாணியாகிவிட்டாள்...
தேசங்கள் தீப்பற்றி எரிகிறது....
இப்போது எல்லோருக்கும்
அரசு இல்லாவிட்டாலும்
அரசியல் தெரிகிறது.....
நமக்கான கனவுகளை
நாங்களே கண்டுகொள்ள
பழகிவிட்டோம்.....
எதையோ தேடப்போய்
அடிப்பெட்டியை குடைந்ததில்......
ஜனநாயகியின்
கறுப்பு வெள்ளை
புகைப்படம் ஒன்றுகிடைத்தது
அழகாகவேயிருந்தாள்
அதை...
ஒரு கையில் வைத்துப்
பார்த்துக்கொண்டே.......!
ஆனந்த்பிரசாத்.
No comments:
Post a Comment