ஒழுகிய விந்தின்
கடைசித்துளி உலருமுன்பு
சிலுவைக்கும்...சீருடைக்கும்
பயந்துபோய் ஓடிவிட்டேன்
ஆணிகளைத் தூக்கிக்கொண்டு
அவர்கள் துரத்தியும்
அறைய முடியவில்லை
ஒரு எல்லைக்குமேல் துப்பாக்கிகள்
வலுவிழந்து போயின
ஆணிக்குத் தப்பி விட்டேன்
முள்முடிக்கும் தப்பி விட்டேன்
இராட்சத 'பூட்ஸ்' களுக்கடியில்
இறந்து படாமலும் கூட....
இங்கேயோ.....
வான்கோழிச் செட்டைக்குள்
பத்திரமாய், பாதுகாப்பாய்
தொடரும் வாழ்வு
கனவுகளில் சாப்பாடு
கையோடு தாம்பத்யம்
மனச் சூட்டினின்றும்
பாதுகாத்துக் கொள்ள...
ஆசைச் செருப்பை
அணிந்து கொண்டேன்
பொய்யென்று புரியுங்கால்
போதைத் துணையிருப்பு
'டாலர்' சிறகடித்து
பொய்வானை வட்டமிட்டேன்
மலத்துக்குள் திளைக்கும்
வண்டாக.....
உருண்டோடும் காலம்
நாளாக நாளாக
ஆசைகளை துரத்திக்கொண்டு
ஆணிகள் மட்டும் வந்தன
ஒவ்வொன்றாய்...முதலிலும்
என் உடலின் ஜீவ அணுக்களுக்கு
சமமாக முடிவிலும்....
மீண்டும் ஓடவாரம்பித்தேன்
என் சிறகு பிய்ந்து போய்
செருப்பு அறுந்து போய்
ஒரு எல்லைக்கு மேல் என்னால்
நகர முடியவில்லை.....
உயிரணுக்கள் ஒவ்வொன்றிலும்
ஆணிகளாய் அறைந்தன.
ஆனந்தபிரசாத்.
No comments:
Post a Comment