யாருக்கோ எப்போதோ
எடுத்துரைத்த ஞாபகம்....
என்னுடைய முதுகில்
ஏற்பட்ட கூனலை நிமிர்த்துவது பற்றி....
யாரென்று நினைவில்லை
எத்தனையோ பேருக்கு
எப்படியெல்லாம் சொன்னேன்?
அத்தனை முகங்களும்
அடியோடு மறந்து போய்...
கூனல் மட்டும்
அப்படியே இருக்கிறது!
நிமிர வழி தெரிந்தும்
பயமாக இருக்கிறது
யார் யாரோ வைத்தியர்கள்
பச்சிலையும் மூலிகையும்
இன்னும் இருக்கின்ற
உலகத்துக் குழைகளெல்லாம்
அடியடியென்று அடித்தும்
அசையவில்லை கூனல்
பரியாரி தந்த பதமான எண்ணைமுதல்
அரபுநாட்டில் உள்ள
அதியுயர்ந்த எண்ணை வரை...
போட்டு உருவியும்....
போகவில்லை...என்றாலும்
கூனல் நிமிரக் கூடிய வழிகளெல்லாம்
நான்றிவேன் நன்கு
நாலுபேருக்கெடுத்துரைப்பேன்
ஆனாலும் எனக்கு
பயமாக இருக்கிறது
நானாக நிமிர்வதெல்லாம்
நடக்காது ஜென்மத்தில்....
பரியாரி விடமாட்டான்
எனக்கு கூனல்
இருக்கின்ற வரைக்கும்தான்
தனக்கு பிழைப்பென்பான்
தடியொன்றும் வைத்துள்ளான்.....
பெருந்தன்மையோடு நான்
கூனிக்கொண்டிருக்கிறேன்.
ஆனந்தபிரசாத்.
No comments:
Post a Comment