Wednesday, May 9, 2012

புதை மணல்

இருளில் கிடந்த என்நெஞ்சக்குழிக்குள்ளே
இரைதேடிச்சிறகடிக்கும்
வெளவால்களாகி......
இருபத்திரண்டு
இசைச்சுரங்கள் எதிரொலியில்
குறிப்பில்லாது.....இறகொடியாமல்
பறந்ததென் சிறிய ஆத்மா
பகைச்சுரங்களால் பழுதுபடாது......உன்
நகைமுகத்தின் வெளிச்சத்தால்
புதிய கூர்ப்படைவேன்......
புலர்வேன்....என நினைத்தேன்!
காலம் குதப்பிக்
களித்த சிறுவெற்றிலை நான்
ஞாலம் சிவக்கும்....என்னும்
நம்பிக்கை வெற்றிடம்தான்
பிரக்ஞைகளுள் ஊடுபாவி
பிறழ்ந்த வாழ்வின் கூறு
விருட்சமாய் வேரூன்றி விகசிக்கும்.....
என நூறு
நம்பிக்கை உந்துதலில்
நாள்கடத்தி....நாளாக......
வெம்பி குலையிழந்த வெறும்பழமாய்...
பண், சுரங்கள்
அற்றுக் கனவாகி அறுந்துவென் சங்கீதம்
உற்ற இசையிலையும்
உதிர்ந்துவிட
நா வரண்டென்
துருப்பிடித்த சொற்களால் உன்
துயர் கீற......துவண்டாலும்
நெருப்பாகித் தீய்க்காது
நியமத்தின் நிஜமறிந்தாய்
உற்ற பொழுதுகளில்
உடனிருந்தென் ஆழ்மனதை
தொற்றிப் படர்ந்து
தொகை தொகையாய் அன்படர்ந்த
கொடியானாய்......நானொருவன்
*கோவேறு கழுதைகளில்
முடியாத பயணத்தை
முன்னெடுத்தேன்.....எனது ரயில்
தண்டவாளத்தை யாரோ
தடம்மாற்றிவிட......தியங்கி
பிண்டமாய் வேற்றுலகின்
புறம்போக்கு நிலம் பிளந்த
புதை மணலில் காலிடறிப் புகுந்தேன்
புலம் பெயர்ந்தேன்
கதை இதுதான்.... எனிலுமோர்
கனவுண்டு....நான் சொந்த
மண்ணுள் புதைந்து
மறைவேனேல்.....என் ஜீவன்
புண்ணுள் முகிழ்த்த புழு!

[*எண்பதுகளில் Over land ஆக
நாடு கடந்து காடு கடந்து
கப்பலிலும் குப்பத்திலும்
வேலைதேடியலைந்தவர்கள்
Yugoslavia வழியாக கழுதைகளில்
வைக்கோல்போருக்குள்ளே
மறைத்துக்கடத்தப்பட்டு
Greece நாட்டுக்குள் தள்ளிவிடப்பட்டார்கள்.
இவர்கள் பட்டதுயர் சொல்லி மாளாது.
இன்றும் நாங்கள் சந்திக்கும்போது
''Donkey flight இல் வந்தோம் மச்சான்"
என்று பெருமை பேசிக்கொள்வோம்.]
ஆனந்தபிரசாத்.

Pena Manoharan ‎'காலம் குதப்பிக் கழித்த சிறுவெற்றிலை நான்',','எனிலுமோர் கனவுண்டு என் சொந்த மண்ணில் நான் மறைவேனேல்' அருமையான,ஆழமான வலி தரும் வரிகள்.வாழ்த்துக்கள்
Nadchathran Chev-Inthiyan


‎*எண்பதுகளில் Over land ஆக
நாடு கடந்து காடு கடந்து
கப்பலிலும் குப்பத்திலும்
வேலைதேடியலைந்தவர்கள்
Yugoslavia வழியாக கழுதைகளில்
... வைக்கோல்போருக்குள்ளே
மறைத்துக்கடத்தப்பட்டு
Greece நாட்டுக்குள் தள்ளிவிடப்பட்டார்கள்.
இவர்கள் பட்டதுயர் சொல்லி மாளாது.
இன்றும் நாங்கள் சந்திக்கும்போது
''Donkey flight இல் வந்தோம் மச்சான்"
என்று பெருமை பேசிக்கொள்வோம்.


Thiru Thirukkumaran காலம் குதப்பிக்
களித்த சிறுவெற்றிலை நான்
கதை இதுதான் எனிலுமோர் கனவுண்டு
நான் சொந்த
மண்ணுள் புதைந்து
மறைவேனேல் என் ஜீவன்
புண்ணுள் முகிழ்த்த புழு!// நீங்கள் எழுதிய கவிதைகளில் என் மனசைத் தொட்ட கவிதை


Sugan Kanagasabai


இருத்தலிற்காய்
***********************
இந்தப் பனிமலையின் இடுக்களூடு
இடுப்பில் இரண்டு குழந்தைகள் ஏந்தி
இவ் இருளும் பொழுதைக் கடந்துவிட்டாலோ
... இத்தாலி வந்துவிடும் என்ற மொழி கேட்டு
எட்டி வைக்கின்ற கால்கள் தளர
இறந்த குழந்தைகள் கதை அறிவார்கள்

தீவுகள் சமுத்திரம் பெருநிலப் பரப்புகள்
திக்கொன்றாக இருக்கிற உறவுகள்
தேடி அலைந்தும் துரத்தப்பட்டும்
பைத்தியம் பிடித்தும் பாதியில் திரும்பியும்
திருப்பியும் திருப்பியும் வெளிக்கிடுகின்றார்
இருத்தலிற்காய்.


Kiri Santh பறந்ததென் சிறிய ஆத்மா

பகைச்சுரங்களால் பழுதுபடாது//புதிய கூர்ப்படைவேன்......

புலர்வேன்......



Thirumavalavan Kanagasingam ‎//காலம் குதப்பிக் களித்த சிறுவெற்றிலை// //வெம்பி குலையிழந்த வெறும்பழமாய்// //புண்ணுள் முகிழ்த்த புழு!// புதியாய் அழகாய் புலர்வாய் கவியே!

Dr.Muttiah Kathiravetpillai Muruganandan ‎"..புறம்போக்கு நிலம் பிளந்த
புதை மணலில் காலிடறிப் புகுந்தேன்
புலம் பெயர்ந்தேன்.." புலம்பெயரலின் வலி அழுத்தமாக வந்திருக்கிறது.

Vj Yogesh அனுபவித்தவைகளை அனுபவித்து எழுதும் போது தான் கவிதைக்கென தனிக் களை கிடைக்கிறது... நெஞ்சைத் தொ(சு)டும் கவிதை bro!
 

Pa Sujanthan ‎//காலம் குதப்பிக்

களித்த சிறுவெற்றிலை நான்

ஞாலம் சிவக்கும்....என்னும்

நம்பிக்கை வெற்றிடம்தான்// supper.

Kiruba Pillai என் சொல்வேன் வார்த்தைகளில் ....வேதனைகளும் உங்களிடத்தே சோக இசையாக மீண்டும் இருபத்திரண்டு இசை ஸ்வரங்களோடு...

Kiruba Pillai


என்னோடு வாழும் என் இசையே ..
துன்பங்களின் உள்ளே ஸ்வரமாகி
இன்பங்களின் கீற்றாகி ... அன்பிலே இழையாகி
ஆசைகளிலே கடலாகி .. என்னை நிறைத்த என் இசையே...
என்னோடு பிறந்தாய் ... என்னோடு மகிழ்ந்தாய் என்னோடு வளர்ந்தாய் ..
... என்னிலே இழைந்தாய் ...நீ இல்லையேல் நானில்லை...
ஆழ குழியினிலே ...இதயம் தாள வீழ்ந்த போதெல்லாம்
தாங்கி பிடித்த கருணை ஸ்வரமே ...
நான் நானாக நீயன்றி வேறில்லை ......


Kiruba Pillai நானும் சேர்ந்து கொள்கிறேன் கவிஞரே ..

Amalraj Francis அருமை சார்.. வித்தியாசமான வாசிப்பு அனுபவம்.

Subramaniam Kuneswaran Sugan Kanagasabai எடுத்துக்காட்டிய செழியனின் கவிதைவரிகளும் ஆனந்தபிரசாத்தின் நீண்ட நாட்களுக்குப் பின்னர் வாசிக்கக் கிடைத்த வரிகளும் புலப்பெயர்வின் துயரங்களைச் சொல்லும் உன்னதமான கவிதைகள் என நினைக்கிறேன்.

Tamilnathy Rajarajan ‎///காலம் குதப்பிக்
களித்த சிறுவெற்றிலை நான்/// நாம் எல்லோரும்:((((


Kiruba Pillai புண்ணுள் முகிழ்த்த புழு..வை .. புதிதாய் புரிந்தேன் ... வாழ்த்துக்கள் கவிஞரே ...

Anand Prasad என் மனத்தெரிச்சலை உள்வாங்கிக்கொண்ட
அனைத்துக் கவிமனங்களுக்கென்
ஆத்மார்த்தமான நன்றி.
எரித்தால் எழுதுங்கள்.....
எரிந்தால் எழுதுகிறேன்!!!
என் மண்ணுக்கும்...
என் மனதுக்கும் சேர்த்து.












 

No comments:

Post a Comment