Tuesday, November 18, 2014

சிறை

 

 

ஓ ப்ரம்மதேவனே

என் ஸ்வாசப்பைகளை

ஏன்

விலாக்கூட்டினுள் அடைத்தாய்

ஓங்கியொலிக்கும் என் குரல்

சிறைக்கூடத்தின்

எட்டாத உயரத்திலிருக்கும்

சிறிய சாளரத்தினூடாக

பலஹீனமாக வெளியுலகுக்கெட்டியது

இசையென்கிறார்கள்....



ஆனந்தபிரசாத்

 

Sunday, July 27, 2014

உதிரத்தின் உள்ளும்.....

 



விடுதலை நெருப்பை தங்கள்

விழிகளில் மட்டும் அல்ல

உடலினுள் ஊடு பாவும்

உதிரத்தின் உள்ளும்.... வெல்லும்

திடமுடன் போரைத் தாங்கும்

திறனுடன் நின்ற பேரை

படுகொலை செய்த பாவி

பரிசுத்தன் ஆன தென்னே?

நூற்றிலே பத்து வீதம்

நுவலரும் துயரைத் தாங்கி

ஆற்றலும் அறிவும்.......தேர்ந்த

ஆளுமை கொண்டு போரால்

மாற்றலாம் நிலைமை என்றார்

மற்றையோர் இவர் நெருப்புக்

காற்றிலே கூதல் காயக்

கரந்தனர் வேற்று நாட்டில்....!

இந்த அவலத்தில் அடியேனும் அடக்கம்......

ஆனந்தபிரசாத்

Thursday, July 17, 2014

கலங்கரைவிளக்கம்

 

 


நள்ளிரவில் ஆழ

நடுக்கடலில் வெண்நுரையை

மெள்ள வகிடெடுத்து

விரைகிறது எனதுகலம்

சுக்கான் பிடித்து

சுழற்றுகிற இறுமாப்பில்

எக்காளமிட்டு

எகிறியது என்மனது

யாரோ கிரேக்கத்து

வியாபாரியின் கப்பல்

ஏராய்க்கடலின்

எழுபரப்பும் உழுதுவர

எனைநம்பி

முப்பத்து ஏழுஉயிர்கள் துயில

முழுநிலவும் வானத்தே

முளைக்கும் நட்சத்ரங்களுமாய்

நழுவுகிற நீர்ப்பரப்பில்

நானொருவன் குறித்த

திசையில் பயணிக்கும்

திறனாய்ந்த சாரதியாய்

இசையின் சுரங்களைப்போல

இழைந்து பேரலைகளுடன்

சமரசங்கள் செய்த

சாமர்தியங்கள் எல்லாம்

அமர வாசகங்கள்

ஆழ்கடலை வென்றேன்

விழத்தெரியா நின்றேன்

விழுந்தேன் எனதுமண்ணில்

உழத்தெரி யாத உடல்

ஆனந்தபிரசாத்