பரமண்டலத்திலிருக்கும் எங்கள் பிதாவே
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக!
உம்முடைய சித்தம்
பரமண்டலத்திலே செய்யப்படுவதுபோல
பூமியிலும் செய்யப்படுவதற்கு
உமது ராஜ்யம் மீண்டும் இங்கே
வரவேண்டும் ஆண்டவரே!!
இயேசு கிறிஸ்துவே!
பரிசுத்த ஆவியினால் நீர்அவதரித்த குற்றத்திற்காக
''பெத்தலஹேமில் அனைத்து
பாலகர்களின் உயிர்களை
பறி...சுத்தமாய்!''என்றான்
ஏரோதென்னும் எருது.
இந்தவிதி இன்னும் அமுலிலுண்டு.
தனியொருவன் பாதுகாப்புக்கு
பால கவசம்
துப்பாக்கி வெடிகுண்டு
பாலகர் வசம்
துர்ப்பாக்கிய ஜனங்களோ
சுத்தமாக்கப்பட்ட பறிகளோடு
அகதி முகாம்களில் வாசம்.
உம்மை அறைவதற்கான
சிலுவையை
உம்மைக்கொண்டே
சுமக்கவைத்தனர் பாவிகள்
இந்தப்பழிக்காக
உலகப்பரப்பின்
ஒவ்வொரு புறத்திலும்
நமக்குரிய குழிகளை
நாமே தோண்டிக்கொண்டிருக்கிறோம்
நம்மைக்கொல்வதற்கான ஆயுதங்களை
நாமே சுமந்துகொண்டலைகிறோம்
உமது தேவாலயங்களில்
நமது ஜீவிதங்கள்.
நீர் மேய்த்துச்சென்ற
ஆடுகளுக்குக்கிடைத்த
தேவ நற்கருணைகூட
மனிதருக்கு கிடைக்கவில்லை
கர்த்தரே உம்மை
விசுவாசிப்பவர்கள் இருக்கிறார்கள்
விற்பவர்களோ..... பெருக்கிறார்கள்
உலகம் பொய்யில் உருள்கிறது
உண்மை ஒருபுறத்தே உழல்கிறது
வெள்ளியை குகையும்
பொன்னை ஸ்புடமும்
சோதிக்கும்
கர்த்தரே நீரன்றோ
ஹ்ருதயங்களை
சோதிக்கிறீர்?
இந்த விகாரங்கள் தெரியவில்லையா?
துன்மார்க்கனை
நீதிமானாக்குகிறவனும்
நீதிமானை
குற்றவாளியாக்குகிறவனும்
தங்களுக்கு
அருவருப்பானவர்களல்லவா?
அதிகாரம் இங்கு
அதைத்தானே செய்கிறது?
பிலாத்து ராஜ்யங்கள்
பெருகிப்போய்விட்டன
பரபாஸின் வம்சமோ
உலகின் மூலை முடுக்கெல்லாம்
கொள்ளையடிக்கிறது
குண்டு வெடிக்கிறது
கொன்று தள்ளுகிறது.....
நியாயம் கேட்டவன்
கொல்கோதாவுக்கு
கொண்டுபோகப்படுகிறான்
வேதபுத்தகத்தில் எழுதியிருக்கிற
சாபங்களெல்லாம்
இந்த தேசங்களின் மேல்
மீண்டும் வந்திருக்கிறதே!
எப்போது அவர்களைக்
கோபத்தினாலும்
உக்கிரத்தினாலும்
மகா எரிச்சலினாலும்
அவர்களுடைய தேசத்திலிருந்து
வேரோடு பிடுங்கி எறியப்போகிறீர்கள்?
சோதோமையும் கொமேராவையும்
அத்மாவையும் செபோயீமையும் போல்
எப்போது இவர்கள் தேசங்களையும்
கவிழ்த்துப்போடப்போகிறீர்கள்?
அநியாயம் செய்கிறவன்
இன்னும் அநியாயம் செய்யட்டும்
அசுத்தமாயிருக்கிறவன் இன்னும்
அசுத்தமாயிருக்கட்டும்
நீதியுள்ளவன் இன்னும்
நீதி செய்யட்டும்
பரிசுத்தமுள்ளவன் இன்னும்
பரிசுத்தமாகட்டும்( வெளி.22.11 )
உண்மையும் சத்தியமுமாய்
நீதியாய் நியாயந்தீர்க்க
கண்களில் அக்னிஜுவாலையோடு
சிரசின்மேல் அநேக கிரீடங்களோடு
இரத்தத்தில் தோய்ந்த
வஸ்திரமணிந்துகொண்டு
தேவனுடைய வார்த்தை என்கிற
நாமத்தை சுமந்துகொண்டு
வெள்ளைக்குதிரையின்மேல்
உமது வருகைக்காய்......
எனது சவப்பெட்டியின்
கடைசி ஆணியை
அறைவதற்கு முன்புவரை
பிரகாசமான நட்சத்திரத்தை தேடி......
கர்த்தரின் ராஜ்யமும்
கல்கி அவதாரமும்
நிகழப்போவதை
நம்பிக்கையோடு.......
ஆனந்தபிரசாத்.
No comments:
Post a Comment