Sunday, November 27, 2011

உலகம் தழுவிய ஒட்பம்.





















என்றோ...எப்போதோ
ஏதோவொரு பறவையின்
எச்சத்தால் பாறையின்மேல்
உயிர்த்துப்படர்ந்து ....அகன்ற
கொடிநாம்!!! உயிர் வேர்கள்
குன்றின் நீர் குடித்து
குளிர்ந்தனவா?  அல்லவெனில்
எம் தண்மை கல்லுக்குள்
ஈரம் நுழைத்ததுவா?


பசியநிறப்பாறைகளை
பசியாற வைத்தவர் நாம்!
கசியும் எமதுதிரத்தால்
பூகோளம் சிவந்தது காண்!!!


எச்சத்தின் வழிவந்த
எச்சங்கள்.........இன்றுலகின்
மிச்சத்தை உண்ணுகிற
மிலேச்சர்க்காய்ப் போராடும்.


பாறைவழி வந்தவர் நாம்
பசி...தாகம்...தாங்கவென
நூறுவழி உண்டு! .....நுண்
உருக்கொள்ள........வேரறுந்து
நாறினும் நாம் உய்வோம்
நாளை உலகுய்யவென.


கணத்துள் முகம்.....நூறு
காட்டும் வியாபாரம்.....எம்
நிணத்துள் புழுவாய்நுழைய
நினைத்தாலும்.....அனுமதியோம்!

Wednesday, November 23, 2011

நிதர்சனம்.













தத்துவங்களால்
தத்தெடுக்கப்பட்டவர்களுக்கும்
தத்துவங்களிலிருந்து
தப்பித்து
வந்தவர்களுக்கும்.... இடையே
தர்மயுத்தம் நடக்கிறது!
முரண்பாடுகள்;
சரிவுகள்;
சலிப்புகள்;
சிலர் தலைமறைவு....
பலர் தலைகள் மறைவு.

நண்பனே!
காற்று எனது கவிதைகளைச்
சுமந்துகொண்டு
கைவீசி நடக்கும்!

சிருஷ'டிகளைச்
சீவியத்தில் நேசித்தவன்
மரணத்தின் பின்
சிருஷ'டிக்கப்படுகிறான்!
தோள்களில்
சுமக்கப்படும்போதுதான்
உயிர்த்தெழுகிறான்.
சிறகுகளை
உதிர்த்துவிட்ட பிறகுதான்
பறக்கவே ஆரம்பிக்கின்றான்!

ஆம்!
இந்த ஆயுதவேதங்களால்
வரையறுக்கப்பட்ட
துப்பாக்கித் தீர்வுகள்
துர்ப்பாக்கியமானது!

இருப்பினும்
இருப்போம், இருப்போம்!!
காற்றிலிருக்கும்
எனது சொற்களை
காலம் மீட்டெடுக்கும்!!!

-ஆனந்த் பிரசாத்-
தேடல் பெப்ரவரி 1990

Tuesday, November 22, 2011

முலாம் பூசாத வார்த்தைகள்.

 


சன்னம் பாய்ந்த என்

இடதுகாதில் --- ஒலி

சந்தேகப்பட்டது!

சங்கீதமா...... இல்லை

சங்கேத வார்தைகளா?

************

பதின்ம வயதுகளில்

பள்ளி வழக்கொழிந்தேன்.

ஊருக்கும் ஒளித்தேன்

உவந்தேன்...இருப்பழிய.

**************

பால்யத்து நட்பொன்று

கடற்கொள்ளையன் போன்று

மாறுவேடத்தொரு கண்

மறுகித் திரைபோட்டு

பொம்மைத் துப்பாக்கியுடன்

''போஸ்'' கொடுத்த புகைப்படத்தை

அம்மம்மா காட்டினாள்

அகமகிழ்ந்து பேரனுக்காய்

அர்ச்சனைகள் செய்தாள்.

ஐயர் ப்ரசாதங்கள்

அஞ்சலிலே பறந்தது.

பேய்களை ஆற்றுப்படுத்ததும்

பெருவிழவாம் என்றுரைத்தாள்

வாயடைத்துப்போனேன்!!!

வந்ததுவோர் சந்தேகம்?

என் துவக்கு நிஜமா........!?!?

இல்லை.....என நாள்போக...

நன்கு தெரிந்துகொண்டேன்.

நானே நிஜம்........வெறும்

நிஜத்தின் நிழலல்ல.

சப்பரத்தில் நீர் போகும்

சகடைதான் நானென்று

அப்புறமாய்த்தான் உணர்ந்தேன்

அந்தோ..................

யாருக்கோ------நான் இறப்பை

யாசித்தேன்!.......விழல்மரத்தின்

வேருக்கு நீராகி

வீணானதென் வாழ்வு.

ஊனமுற்றூருக்குள்

உயிர்தரித்து உலவவர.....

மானமற்ற துரோகியென

மரியாதை.......! நீர் பெற்றுக்

காவு கொடுத்த உயிர்

கணக்கில்லை..... என்வரையில்

சாவு அதுவாக வந்து

சாகாதது தான் எந்தன் சாபம்!!!







Friday, November 4, 2011

நேற்றைய போராளி!
















மழைக் கை பிடித்து சில
அடிகள் நடந்தேன் - வந்த
மலைப்பால் நடை குளிர்ந்தேன்!
கழையைத் துணையாய் எந்தன்
கக்கத்துள் வைத்தேன் அந்தக்
களையால் உடல் தளர்ந்தேன்.
விழையும் திறன் மீண்டும்வர
விசையுந்திப்போய் நொந்து
வலியாலறிவழிந்தேன்.
நுழையும் வழி தெரிந்தும்....நூல்
நுழையாத ஊசியின் கண்
பிழையாலழிந்தொழிந்தேன்.

கனவாகி இவையாவும்
கழிந்தோடிப்போயின - பின்
கனடாவில் கால்பதித்தேன் - வெறும்
நினைவாக இவையாவும்
நின்றுவிட.....நீள்கனவின்
நினைவுகளை நான்மதித்தேன்.
அனல்வாதம் புனல்வாதம்
அடிபட்டுப்போனாலும்
அகதியாய்ப் பரிணமித்தேன்
இனவாதம் பிடிவாதம்
இவையெல்லாம் போய் இளகி
இதமாகிப் பரிமளித்தேன்.

வயதொன்று போகும்! ஒரு
வருடம் கடந்தால்...... அது
வரலாறு..... என ஏகுமே!
நயமோடு நஷ்டமும்
நன்மைதான்.....என்றால் - சில
நிம்மதிகள் வரவாகுமே.
பயனொன்று வாழ்வினில்
பயந்ததென்றால்..........சொந்த
பந்தங்கள் உறவாடுமே
சுயலாபத்திரையில்........சில
சித்திரம் தீட்ட - உற(வு)
உறவாமல் மனம் வாடுமே.

உன்மத்தம்..... என் மத்துள்
உழன்றுழன்று கடைந்ததில்
உயிர் தயிரில் நெய்யானது......இனி
ஐன்மத்தில் உயிர்கொல்லும்
எண்ணம் வலுவிழந்தென்
ஏகாந்தம் மெய்யானது
வன்முறையால் தீர்வுகளே
வாராதென்றோரறிவு
வந்ததுகாண்.......பொய்யானது
என்வரையில்.....தோற்றுவிடும்!
ஏதமிலாதென்னுள்ளில்
எழுநம்பிக்கையானது.

கண்கெட்ட பின்பு.......வரும்
கதிரவனைக் கண்டுவிட
கனகாலம் வீண்டித்தேன்!
பண்கட்டிப் பாட்டெழுதும்
பயனிலதோர் பாவலனாய்
பலகாலம் பாழடித்தேன்
வெண்கட்டியோடொருகால்
வேள்விகளைக்கரும்பலகை
வேர்க்கக் கதையளந்தேன்
என்கட்டிலிதுதான்!....... இதை
இனிமூடு.......! ஆணியடி!!!
என்றுநான் கண்வளர்வேன்!!!
ஆனந்தபிரசாத்.

"war"anti!


















Take your time....until your ego satisfies
don't even take a moment to sacrifice.
whatever consequences that we embrace
waiting game is ours...with disgrace.
Oh dear war lords....!
destroy me entirely to eternity
destroying me half way through
please don't let my mother
for another maternity
I would like to use the word starts with f....
would that help to stop the heck?
we all have heart and souls
how come it's all being sold?
Liver, pancreas and the other organs
rip my life prematurely
am I underestimating
your proclaimed slogans
If I happened to live next to river bank
existance will never go that bad
greed and selfishness overhwelmed
ripped off my life whatelse so sad!!!!
Anandprasad.