தோண்டிக்கொண்டிருக்கும் போது
சொன்னார்கள்......
தோன்றியவிதமாகவெல்லாம்.
சிலபேர் சொன்னார்கள் தங்க நாணயங்களென்று!
சிலபேர் சொன்னார்கள் முத்து நவரத்தினமென்று.
கொஞ்சப்பேர் சொன்னார்கள் கோமேதகமென்று
மிஞ்சியிருந்தோரும் மெத்தச்சரியென்றார்!
பார்வையாளர்கள் தானே?
பதிலளிக்கத்தேவையில்லை.
வேர்வையில் முக்குளித்து விரைவாகத்தோண்டினார்கள்
'' ணங் '' என்று சத்தமொன்று......!?!?
தோண்டுபவர்களுக்குள் தோன்றியது கைகலப்பு!
மாண்டவர்கள் ஓரிருவர்,
மற்றவர்கள் தோண்டினார்கள்.
பார்த்துக்கொண்டு நின்றவரில் பாதிப்பேர் சொன்னார்கள்
விடுதலை....விடுதலை......
விடுதலைதான் கிடைக்குமென்று.
மூலைக்குள் நின்ற சிலர் முன்னுக்கு வந்தார்கள்
பார்க்கவல்ல...... தோண்ட.
மீண்டும் உற்சாகம்! மீண்டுமொரு நம்பிக்கை.
'' ணங் '' என்ற சத்தம் இப்போது
பலதடவைகள் கேட்க..........
தோண்டுபவர்களுக்குள் மீண்டும்
தோன்றியது.....கைகலப்பு.
மாண்டவர்கள் ஏராளம்!
பார்வையாளர்கள் உட்பட.
தோண்டுவதை மறந்து
சிலகாலம் பொருதினார்கள்
தோண்டிய குழியெல்லாம்
சதையும், இரத்தமுமாய்..............
வழிப்போக்கர் சிலபேர் வகைசொல்ல வந்தார்கள்.
அமைதி நிலைநாட்டுவதாய்
அப்பம் பிரித்தார்கள்.
இதைச்சிலபேர் மறுத்தார்கள்.
தோன்றியது கைகலப்பு.......
வழிப்போக்கரோடு சேர்ந்து
நின்றவரும் போய்த்தொலைந்தார்!
எஞ்சியவர் தோண்டினார்கள்............
செத்தொழிந்துபோக...மிச்சம்
பார்வையாளர்கள் சொற்பம்.
தப்பிப்பிழைத்தவர்கள்
தோண்டியதை அள்ளவென
தொலைதூரம் போனார்கள்
'' ணங் '' என்ற சத்தம்.....இப்போ
கேட்பதேயில்லை.
தோண்டியவர்கள் வேறு வழியேயில்லாது
தோண்டிக்கொண்டேயிருந்தார்கள்.
புதையலுக்காகவல்ல.................
ஒருலட்சம் பிணங்களை
போட்டுப்புதைப்பதற்காய்.................!
{இற்றைக்கு சுமார் இருபது வருடங்களின்முன்பு.....1991.....
கற்பித்த வரிகள்.... நணவாகிக்கண்முன்பு..........
நன்றி; '' தாயகம்'' }
"புதையலுக்காகவல்ல.................
ReplyDeleteஒருலட்சம் பிணங்களை
போட்டுப்புதைப்பதற்காய்.."
அவலம்.மனதை வாட்டுகிறது.
மிஞ்சியிருந்தோரும் மெத்தச்சரியென்றார்!
ReplyDeleteபார்வையாளர்கள் தானே?
பதிலளிக்கத்தேவையில்லை.//
உண்மை நிலை கொடுமையானது....