திருகிப் பறித்து முகர்ந்து கசக்கி
எறிந்த சிறுபூக்கள்.
தாவர வாசனை தெரிந்துகொள்ள
நுள்ளிக்கிழித்த இலைகேநுனிகள்.
உறிஞ்சிய குற்றத்திற்காய்
இருபெருவிரல் நகநடுவே
நசுங்கி வெடித்த மூட்டைப்பூச்சிகள்.
குறுக்கேபோன குற்றத்திற்காய்
குடல்தெறிக்க உதைவாங்கிய
பூனைக்குட்டிகள்
நள்ளிரவுக் குலைப்பிற்காய்
கல்லடி வாங்கிய குட்டிநாய்கள்.
உடம்பில் கடிவீங்கிய தருணம்
அடிவாங்கி மரித்த நுளம்புகள்.
பின்நவீனத்துவப்பேதமை அற
ரசாயணக்கலவைகளின்
சீறலில் செத்துப்போன
சின்னஞ்சிறு ஜந்துகள்.
அயலார் பயிர் மேய்கைக்காய்
பனைமட்டைக்காவடியெடுத்த
ஆட்டுக்குட்டிகள்.
கவண்பயிற்சிக்கல்லடியில்
இறகு கிழிந்த கிழிக்குஞ்சுகள்.
பாஷாண பாசத்தில்
பலிபோன எலிக்குஞ்சுகள்.
சாதிப்பிளவுகளின் சமரில் எரியுண்ட
ஆதிதிராவிடத்து அக்கினிக்குஞ்சுகள்.
அயல் வளவிற் கிளைத்த
பூவரசின்...............கதியால்!!!
அரிவாள் சமர் விளைத்த
அமானுஷ்யக்குட்டிகள்.
வளவும் தொலைந்து சொந்த
வளமும் தொலைந்து இனி
அழவும் வலிவின்றி அவலம் தலைசுமந்து
பகடைகளாய்பலிபோன அகதிக்குஞ்சுகள்.
''பதம் பட்டாலே எறும்பும்
வதம்...!!! என்ற போதம்வர
மயிற்பீலி தரை நீவ
தடம் பார்த்து நடப்போரைத்தவிர்த்து.......''
ஏனயவை யாவும்.......குரூரமே!!!