Sunday, December 18, 2016

ஜோயானியின் சிலுவைப்பாடு

திருக்கோணமலை ஆனந்தப்ரசாத்

அந்த வருடத்துக் கோடைகாலம் வழமையை மீறி சூடு பிடித்திருந்தது. செயற்கைக் குளிரூட்டிகளோடு ஒத்துவராத நான் படுக்கையறை ஜன்னல் கதவை விரியத்திறந்து வைத்துத் தூங்கப் போனேன். நள்ளிரவு ஒருமணி இருக்கும். 
''பஸ்கால்...... பஸ்கால்.......''
''இப்போது என்ன வேண்டும் உனக்கு?''
''எனக்கொரு மூலிகை கிடைத்திருக்கிறது.....வாயேன்... வாயேன்.... ''
''கொஞ்சம் பொறு.... அம்மா தூங்கிவிட்டாளா என்று நிச்சயப்படுத்திக் கொண்டு குதிக்கிறேன்..... ப்ராவோரே பியேர்''
கிசுகிசுத்த ரகசியக்குரலில் இவர்களது உரையாடல் எனது செவிப்பறையை உரசிக் கடந்துபோன சிறிது நேர அமைதிக்குப் பிறகு எனது தலைமாட்டுப் பக்கத்தின் குடியிருப்பு அடுக்கிலிருந்து 'பால்கணி' வழியாக பஸ்கால் முதலாம் மாடியிலிருந்து தரையிறங்கிய ஒலி அந்தப் பசும் புற்தரையிலும் துல்லியமாகக் கேட்டது.
நிமிஷங்கள் சில கடந்தன. அதுவரை ஜன்னல் வழியாகக் குளுகுளு வென்று வந்துகொண்டிருந்த தென்றலுக்கு இப்போதோ கிளுகிளுப்பு ஏறியிருந்தது. எனது இளவயதில் நுகர்ந்தறிந்த இந்த வாசனை என்னவென்று இலகுவில் இனங்காண முடிந்தது.
''இதுதான்றா சிவமூலி எங்கிறது......'' என்று சிலாகித்துத் திருக்கோணமலைக் கவிராயர் உருட்டிச் சுருட்டித் தீ மூட்டி எனது நண்பர்கள் வட்டத்துக்குள் முதலாவது சுற்றுக்கு அனுப்பிவைப்பார். தொடர்ந்து பல சுற்றுக்கள். கொஞ்சம் தலை சுற்றும். பின்னர் தகுந்த காரணமில்லாதே சிரிப்புவரும்!
'தொதலுடன்' 'ப்ளென் டீ' கேட்கும். பன்றியைவிடவும் மோசமாகப் பசிக்கும். இத்யாதி இன்ப அவஸ்த்தைகளை எல்லாம் இளவயதில் அனுபவித்தவன் நான். கனடா நாட்டின் மான்ரியால் நகரில் தன்னந் தனியே புதுக்குடித்தனம் வந்து முப்பது வருடங்களாகிறது. திருக்கோணமலைக்குத் திரும்பிப் போகவேயில்லை. இந்த வாசனையால் இனாமாகக் கிடைத்த விமானச்சீட்டில் ஊருக்கு மானசீகமாக ஒரு பயணம் போய் வந்தேன். வந்த களையோ என்னமோ தூக்கம் இதமாக இமைகளை அழுத்தியது.
 திடீரென்று பியேர் என்கிற மூலிகைப் பையனின் குரல் குட்டிநாய்க் குரைப்பையொத்து அமைதியையும், தூக்கத்தையும் அலாக்காகத் தூக்கிக்கொண்டு போனது. பிரெஞ்சில் கத்திக்கொண்டிருந்தான். பஸ்கால் அவனுடன் அந்த நள்ளிரவில் வெளியே போகவேண்டுமாம்.இன்னும் மூலிகை வேண்டுமாம். பெட்டைக் குரலில் சிணுங்கிச் சிணுங்கிப் பஸ்கால் மறுத்துக்கொண்டிருந்தான்.
''அம்மா எழுந்துவிடுவாள்..... போய்விடு..... போய்விடு....'' என்று கெஞ்சிக்கொண்டிருந்தான். நித்திரையை நிலைகுலைத்த இந்த லொள்ளுத் தாங்கமுடியாத நான் ரெளத்ரம் பழகினேன். படுக்கையை விட்டெழுந்து ஜன்னல் வழியாகத் தலையை வெளியேற்றி '' டேய் பெட்டை நாய் பெற்ற மகன்களா...... பிருஷ்ட பாகத்து ஓட்டைகளா...... வாயை மூடிக்கொண்டு இடத்தைக் காலி பண்ணப் போகிறீர்களா அல்லது நான் 9.1.1 க்கு அழைப்பு விடுக்கவா... தபர்நாக்......'' என்று பிரெஞ்சில் கூட்டியள்ளி சுமார் இரண்டரைக் கட்டை ஸ்ருதியில் கத்தினேன். பியேர் இருளில் மென்காற்றில் கலந்து மறைந்தான். பஸ்காலின் அன்னை ஜோயானி எழுந்து பால்கணிக்கு வந்து பஸ்காலை உள்ளே விரட்டிவிட்டு அழாக்குறையாக எனக்கு நன்றிசொல்லி மன்னிப்பும் கோரிவிட்டு அப்பார்ட்மென்ட்டுக்குள்ளே போனாள். ஜோயானி நன்றி சொன்னதற்கு அழுத்தமான காரணமிருக்கிறது.
அவள் தனது நன்றியறிதலை மிகவும் உயர்தரமான பிரெஞ்ச் சொற்களை உபயோகித்துக் கண்கள் பனிக்கச் சொல்வாள்.!
ஜோயானியின் விவாகம் ரத்தாகிப் பஸ்காலின் வளர்ப்புரிமை இவளுக்கேயென நீதிமன்றம் தீர்ப்பளித்ததும் எனது குடியிருப்பின் படுக்கையறையோடு ஒட்டியிருந்த அடுத்த ''கொண்டொமீனியத்தை'' சொந்தமாக வாங்கி மகனோடு குடிவந்து மூன்று ஆண்டுகள்தான்.
நடுத்தர வயதை அண்மிக்கும் வயதெனினும் குடும்ப வாழ்வின் ஒழுங்கீனங்களினாலும், பதின்ம வயதிலிருந்தே இவளைப் பீடித்திருந்த தொடர்ச்சியாகப் புகைபிடிக்கும் பழக்கத்தினாலும் இளைப்பாறும் வயதைத் தாண்டியவளைப்போன்ற தோற்றம். கலகலப்பாக எல்லோருடனும் பேசுவாள். எப்போதும் சிரித்த முகத்தோடு காணப்படுவாள். பார்ப்பவர்களுக்கு இவளுக்குள்ளிருக்கும் அதள பாதாளங்களை வதனத்தின் வழியாக எட்டிப்பார்த்துத் தெரிந்துகொள்வதென்பது அத்தனை எளிதல்ல. சுருக்கங்களுடன் கூடிய முகத்தில் வாய்திறந்து சிரிக்கும் போதோ காவிபடிந்த பல்வரிசை எனதூரின் அங்கிலிக்கன் இடுகாட்டின் மதிற் சுவரை கண்முன் கொணரும். கொஞ்சம் பயமாக இருக்கும். காலத்தை மீறி நரைத்துப்போன கேசம். இலேசாக ஆங்காங்கே தெரிந்த பொன்னிறத்து முடிகள் ஒருகாலத்தில் இவளும் வஞ்சனையில்லாத அழகுடன் திகழ்ந்திருக்கலாம் என்று ஊர்ஜிதப்படுத்தியது. எனது இலக்கணம் மீறிய பிரெஞ்ச் உரையாடலைக் கேட்டுச் சிரித்தாலும் பொறுமையாகத் திருத்துவாள்.
திருமணமான புதிதில் தெரிந்திருக்கவில்லையெனினும் ஆறே மாதங்களில் கணவனின் ''மரியுவானா'' பழக்கத்தை அறிந்துகொண்டாளாம். பஸ்கால் இவளுடைய சிகரெட் பாக்கெட்டிலிருந்து திருடிப் புகைப்பதைக் கண்டும் காணாதுவிட்ட தந்தையின் அலட்சியத்தால் பதின்மூன்று வயதிற்குமேல் மகன் அப்பனிடமே சிவமூலியைப் பெற்றுக்கொண்டு நண்பர்களுடன் இரு கரங்களையும் குவித்துவைத்துக்கொண்டு இழுத்த இழுப்பில் அனுபூதி
அடைந்தார்களாம். பஸ்காலோ அதையும் தாண்டிப் புனிதனாகி விட்டான். ''ஹெரோய்ன்''....  ''க்ரிஸ்டல் மெத்''.....  ''எக்ஸ்டெஸி'' ...... இவ்வாறாக வருடா வருடம் வகுப்பேற்றப்பட்டான். பதினெட்டாவது பருவத்தில் பாடசாலையில் போதைப்பொருள் பாவித்துப் பிடிபட்டு ஒரு ஆறுமாதம் சீர்திருத்தம் பெற அனுப்பிவைக்கப் பட்டானாம். சீரும் சிறப்புமாக வருவான் என்று எதிர்பார்த்திருந்த ஜோயானிக்கு அவன் திரும்பி வந்த பிறகுதான் தெரிந்தது மகன் சில மேற்படிப்புகளை முடித்துக்கொண்டு முதுகலைமாணியாகிய விபரம்.
பஸ்கால் இரண்டு வாரங்களுக்கொருதடவை தகப்பன் ஊதியம் பெறுகிற நாட்களில் அங்கே போய்விடுவான். ஜோயானியின் ஜீவனாம்சப் பணம் வங்கிக் கணக்கில் இருப்பிடப்படும் தினங்களில் இங்கு வந்துவிடுவான். இவர்கள் குடிவந்த புதிதில் ஒருநாள் மாலை மிதமான போதையில் தாயிடம் பணம் கேட்டிருக்கிறான்..... கிறக்கத்தில் முழுமையடைய. அவளோ மறுத்திருக்கிறாள். கோபத்தில் சமையல் பாத்திரங்களையெல்லாம் தூக்கியெறிந்து அட்டகாசம் பண்ணிக்கொண்டிருந்தான். அது ஒரு இலையுதிர்கால ஆரம்பம். பனிக்காலம் வரப்போகிறதே..... குளிர் வந்து கூத்தாடப் போகிறதே...... சர்வமும் உறைந்து போய்விடப் போகிறதே....... என்கிற முன்னோட்டத்தைப் பார்த்த எரிச்சலில் ஏற்கெனவே சலித்துப் போய்க்கிடந்த எனக்கு இவன் கூச்சல் வேறு வெறுப்பேற்றிவிட எழுந்து வெளியே போய் அவர்களது குடியிருப்பின் கதவைப் பலமாகத் தட்டினேன்.
பஸ்கால் தான் கதவைத்திறந்தான். ''வீ.... மிஸ்யு....'' ஒருவித எக்காளத்தொனியில் வினவினான். '' சத்தத்தைக் குறை.... எனது அமைதிக்கு அது இடையூறாக இருக்கிறது'' என்றேன். அதற்கு அவன் என்னுடைய வியாபாரத்தை மட்டுமே கருத்திற் கொள்ளும்படி அறிவுறுத்துவதாகச் சொன்தோடு உதிரியாக நான் அவ்வாறு நடந்து கொள்ளாது போனால் எனது பின்புறங்களை அவன் புணர்ந்துவிடுவான் என்றும் அச்சுறுத்தினான். அடக் கிரகசாரமே! முன்புறத்தால் புணரவே வக்கில்லாது தனியே கிடக்கும் எனக்கு எனது பின்புறங்கள் கிள்ளுக் கீரையாகிப் போவதா என்ற சினம் பிடரியில் உந்த எனது வலது கையால் அவன் மேற் சட்டையை முறுக்கிப் பிடித்து இடது கரத்தால் தலைமுடியைக் கோலியெடுத்து முகவாய்க் கட்டை நிமிர்த்தி இழுத்து எனது முகத்திற்கு  இரண்டங்குல இடைவெளியில் நிறுத்தி கண்களுக்குள் கண்களால் ஊடுருவித் துளைத்து நீ இப்படிப் பேசியதற்கு இப்போதே மன்னிப்புக் கேளாவிட்டால் உனது உடலிலுள்ள அத்தனை ஓட்டைகளிலும் நான் புணர்ந்துவிடுவேன் என்று அறிவுறுத்தினேன். எதிர்பார்க்கவில்லை. அதிர்ந்துபோய்விட்டான். ஜோயானியிடம் எந்தவொரு சலனமும் இல்லை. அவளது நெற்றியில் இரத்தம் இலேசாகக் கசிந்து கொண்டிருந்தது. வரவேற்பறையில் பாத்திரங்கள் சிதறிக்கிடந்தன. ஒரு மேஜை விளக்கு எரிந்தபடியே தலைகீழாகத் துவண்டுபோய்க் கிடந்தது. அறை முழுவதும்  புகையிலை நாறியது. ''பார்தோன் மொவா..... மிஸ்யூ..... ஸில்வுப்ளே.....எக்ஸ்க்யுஸே மொவா.....'' பணிந்தான். பிடியைத் தளர்த்தி மிகக் குறைந்த விசையில் அவனை உள்ளே தள்ளிவிட்டு வெளியேறினேன்.
மறுநாள் மாலையில் அமைதியாக வீட்டிலமர்ந்து புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கிறேன்....... கதவு தட்டப்படுகிறது. எழுந்து போய்க் கதவில் பொருத்தியிருந்த கண்ணாடித் துவாரத்தின் வழியே பார்க்கிறேன். ஜோயானிதான். திறந்துவிட்டு வாழ்த்துச் சொல்லி என்ன வேண்டும் என்று கேட்டேன். நேற்று நிகழ்ந்தவைகளுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டதோடு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததற்கு நன்றியும் தெரிவித்தாள். நான் எதுவும் பேசவில்லை.நெற்றியில் ஒரு பெரிய ப்ளாஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.  ''பொன்ஸ்வாரே....'' என்று மாலை வணக்கத்தை சொல்லி வாழ்த்திவிட்டுப் போனாள்.

இந்தச் சம்பவம் நடந்து முடிந்து பின் தொடர்ந்த நாட்களில் அமைதி அமுலிலிருந்தது. அவ்வப்போதில் பஸ்கால் எதிர்ப்படும் போதில் எனது நாள் சிறக்க வாழ்த்திவிட்டு பவ்யமாக ஒதுங்கிப் போவான். அவன் கட்புலனுக்கு நான் ஒரு அதிதீவிரவாதியாகவே தெரிந்திருக்க வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்! எனது தோற்றமும் ஏறத்தாழ அப்படித்தான். நல்ல உயரமும் அதற்கேற்ப உடல்வாகும் நியமமாக முகச்சவரம் செய்துகொள்ளாதிருப்பதால் வளர்ந்தும் வளராததுமாகத் தாடியும், மீசையும்....... எல்லாமும் ஒருமித்து என்னையொரு அல்கையிடா, ஹிஸ்புல்லா ஜிஹாதிகளோடு இணைத்து விட்டிருக்கலாம்!!  எல்லாவற்றினும் மேலாக வெயில் நாட்களில் காதி கிராமில் வாங்கிய கதர் ஜிப்பாவை வேறு அணிந்துகொண்டு வெளியே செல்வேன் குளிர்ச்சிக்காக!!!
இதன் பின்னர் கடந்து போன இரண்டு குளிர்காலங்கள் வரையிலும் எந்தவொரு அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை. தொடர்ந்து வந்த ஒரு இளவேனிற் காலத்தின் பின்னிரவில் நான் வீடு திரும்பவேண்டி இருந்தது.  தரிப்பிடத்தில் எனது வாகனத்தை நிறுத்திவிட்டு நிமிர்ந்தால் நேரெதிரே முதலாம் மாடியில் ஜோயானிவீட்டு பல்கணியின் கண்ணாடி கதவை வெளிர்நீல நிறத்தில் மெல்லிய திரைச்சீலை மறைத்திருந்தாலும் வெளிச்சம் கசிந்தது. குடியிருப்புமாடிக் கட்டித்தின் பின்புறத்து நுழை வாயில் வழியே உள்ளே வந்து படியேறி எனது அறைக்கதவை நோக்கி நடந்து வரும்போது ஜோயானியின் அறைவாசலைக் கடக்கையில் கதவு இலேசாகத் திறந்துகிடந்ததை அவதானித்தேன். நள்ளிரவு தாண்டிய நேரங்களில் விளக்கெரிந்து கொண்டிருப்பதையோ அல்லது வாயிற்கதவு திறந்து கிடந்ததையோ என்னால் ஒரு போதும் காண நேர்ந்ததேயில்லையே? அதிலும் இப்படியொரு புத்திர பாக்கியத்தைப் பெற்றவள் இந்த நேரத்தில் விளக்கெரிய விடுவதா...... கதவைப் பூட்டாதிருப்பதா? ஏதோ சரியில்லை என்று அனுமானித்துக்கொண்டு மெதுவாகக் கதவைத் தள்ளித் திறந்து உள்ளே எட்டிப் பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை. ''மதாம்.....ஜோயானி..... மதாம்... வுஸாவே லெஸ்ஸே வோத்ர போர்த்தாந்ரே உவ்வேர் மதாம்.....'' (அம்மணி..... தங்கள் குடியிருப்பின் பிரதான வாயிற் கதவு திறந்து கிடக்கிறது....)  ரகசியக்குரலில் சொல்லிக்கொண்டே வரவேற்பறைக்குப் போய்ப்பார்த்தால் ஆளில்லை. அழைத்துக்கொண்டே திறந்தே கிடந்த படுக்கையறைக்குள்ளே பார்த்த போது உறைந்து போனேன்! வெண்ணிறப் படுக்கை விரிப்பில் இரத்தம் ஊறிப் பரவியிருக்க குப்புறக் கிடந்தாள் ஜோயானி.

9-1-1 அவசரகால சேவைக்கு எனது கைப்பேசியில் அழைத்து விபரம் தெரிவித்து முகவரியைக் கொடுத்து ஆம்பியுலன்ஸ் அனுப்பிவைக்கும் படி சொல்லிவிட்டு எனது அறைக்குள் வந்து விழுந்தேன். வேலைக் களைப்போடு இந்தக் காட்சிப் பிழையும் சேர்ந்து கொள்ள தலை லேசாக வலித்தது. குளிர்பதனியிலிருந்து ஒரு பியர்ப் போத்தலை எடுத்து நெற்றியில் உருட்டிக் குளிரவைத்து பின்னர் உடைத்துப் பருகிக்கொண்டிருக்கையில் கண்ட காட்சிகளின் குரூரம் விஸ்வரூபமெடுத்து உறையவைத்தது. என்ன நடந்திருக்கும்?

இந்தப் பரதேசிப்---------மோன்தான் காசு கிடைக்காத கோபத்தில் அடித்துப்போட்டிருப்பான். வேறு யாரும் ஜோயானியின் குடியிருப்பிற்குள் வந்து நான் பார்த்ததேயில்லை. இந்த நாய் மகனிடமும் ஒரு ஜோடித் திறப்பு இருந்திருக்கலாம். ஏழே நிமிடத்தில் சிவப்பும் நீலமும் கலந்த சுழல் விளக்கின் பிரதிமைகள் எனது கண்ணாடி ஜன்னலில் படபடத்தது. வாகனத் தரிப்பிடம் வழியாக ஒரு போலீஸ் வாகனமும் அம்பியுலன்ஸும் வந்து நின்றது. நான் எழுந்து ஓடிப்போய்ப் பின்புறத்து வாயிற் கதவைத்திறந்து அவர்கள் உள்ளே வர வகைசெய்துவிட்டுக் கூடவே நடந்து வந்தேன். ஆம்பியுலன்ஸ் பணியாளர்கள் ஜோயானிப் பரிசோதித்துவிட்டு ஸ்ரெட்சரில் கிடத்தி மருத்துவ மனைக்கு எடுத்துப்போகும் ஒழுங்குகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதில் போலீஸ் என்னைக் குடைந்து கொண்டிருந்தது விசாரணையென்ற பேரில். கண்டதைச் சொன்னேன். அவளைப்பற்றி நான் அறிந்துகொண்டதையெல்லாம் அறிவித்தேன்.  ஜோயானி கொண்டுபோகப் பட்டாள். போலீஸ் எனது தகவல்களை எழுதிக்கொண்டு அவளது வீட்டைச் சோதனை போட்டுவிட்டுக் கதவை மூடி 'சீல்' வைத்துக் கிளம்பிப்போனது.

இரண்டு நாட்கள் கழிந்துபோயின. ஜோயானி சார்லெமோய்ன் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக எமது குடியிருப்புக் கட்டிடப் பராமரிப்பாளர்  மொறீஸ் மூலமாக அறிந்துகொண்டு சென்று பார்த்தேன். தலையில் பலமாக அடிபட்டதனால் தற்காலிகக் கோமாவில் இருந்தாள். கண்களையும், நாசியையும் தவிர முகம் முழுவதும் துணியால் கட்டுப்போடப்பட்டிருந்தது. இரண்டொருநாள் ஆகும் கண்விழிக்க என்று சொன்னார்கள். பார்வையாளர் பதிவேட்டில் கையெழுத்திடும் போதில் நான் இரண்டாவது பேர்வழியென்று தெரிந்தது. முதலாவது ஜானிற்டர் மொறீஸ்.

ஒன்பது நாட்கள் கடந்துபோயின. அன்று மாலையில் வழமையே போல் வேலை முடிந்து திரும்பி வந்து தரிப்பிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்து நடந்து வந்துகொண்டிருக்கிறேன். ஜோயானியின் அறைவாசலைத் தாண்டும் சமயம் அவள் கதவு திறந்தது. பால்கணி வழியாக என்னைப் பார்த்திருப்பாள். தலையைச் சுற்றிக் கட்டுப்போடப்பட்டிருந்தது. இடது கன்னத்தில்ஒரு பெரிய ப்ளாஸ்டர். நன்றி சொன்னாள். போலீஸ் மூலமாக நினைவிழந்த பின்னர் நடந்த விபரங்களை அறிந்துகொண்டாளாம். கண்கள் நீர்க்கோலமிட்டிருந்தன. பஸ்கால் போதைத்பொருள் நுகர்வோர் புனர் வாழ்வு இல்லத்தில் அனுமதிக்கப் பட்டிருக்கிறானாம். சீர் திருந்திய பின்னர்தான் திரும்புவானாம். தகப்பன் க்யூபெக் மாகாணத்தின் தூர கிழக்கே காஸ்பிஸீ மாவட்டத்தில் எங்கேயோ எவளோடோ இன்னமும் சீவிக்கிறான் என்று கேள்விப்பட்டாளாம்.  நான் அன்று அவளைப் பார்க்காதே போயிருந்தால் அதிகளவு இரத்தப் போக்கால் ஜீவனை விட்டிருப்பாள் என்று டாக்டர் தெரிவித்தாராம். என்னைப் புனித அந்தோனியார் என்றென்றும் ஆசீர்வதிப்பாரென்றும் சொன்னாள். ''பொன் சுவாரே...'' என்று மாலை வணக்கம் தெரிவித்துவிட்டு நகர்ந்தேன்.
அட.....!!! கண்களை மூடித்திறப்பதற்குள் மரங்கள் அனைத்தும் நான்கு தடவைகள் இலைகளை உதிர்த்துவிட்டிருந்தன. ஐந்து பனிக்காலங்களில் நானும் உறைந்து இளவேனிலில் உருகியிருக்கிறேன். வாழ்வின் அவசரங்களில் ஒரு மணிக்கூறு நிமிடமானது. இக்காலப்பகுதியின் நடுவே க்யூபெக் மாகாணம் கனடா நாட்டோடு ஐக்கியப்பட்டிருப்பதா தனிநாடாகிப் பிரிந்தேகுவதா என்ற சர்வஜன வாக்கெடுப்பும் பிரெஞ்சுப் பிரிவினைவாத‍ அரசியல்வாதிகளால் முன்னெடுக்கப்பட்டுத் தோல்வியில் முடிந்திருந்தாலும் அதிதீவிர பிரிவினைவாதிகள் விடுவதாயில்லை.
இந்த இழவால் பலத்த பொருளாதாரப் பின்னடைவும், அதன் விளைவாக வேலைவாய்ப்பின்மையும் ஒன்றுகூடிப் புணர்ந்து வறுமையைப் பெற்றெடுத்தன. நாய்க்கு நடுக்கடலுக்குப் போனாலும் நக்குத் தண்ணிதான்! இந்த உபத்திரவங்களினால்தான் தவழ்ந்த பூமியை விட்டு நாடு நாடாகத் தவழ்ந்து இங்கு வந்து சேர்ந்து ஏதோ ஒரு சிறு மனையையும் சொந்தமாக்கிக் கொண்டு நிம்மதியாக இளைப்பாறலாம் என்று பார்த்தால் கழுத்தறுக்கிறான்கள்!  எனக்கும் வேலை போய்விட்டது.
மெதுவாக எனது குடியிருப்பை வாடகைக்கு விட்டுவிட்டு வேறெங்காவது போய்விடுவதென்று முடிவெடுத்தேன். ஒண்டாரியோ மாகாணத்தில் டொரொண்டோ நகரிலிருந்த எனது நண்பர்களிடம் மேற்படி முடிவைச் சொன்னேன். ''வா.....பார்க்கலாம்..... இங்கேயும் இப்போ பெரிதாக சுபீட்சங்கள் இல்லை...... இருப்பினும் முயல்வோம்'' என்றார்கள். சிறு நம்பிக்கை முகிழ்த்தது. பஸ்காலின் தொல்லைகள் இல்லாததனால் ஆரம்பத்தில் இரண்டு வருடங்கள் ஜோயானி நிம்மதியாகவும் கலகலப்பாகவும் இருந்தாள். என்னவோ சமீபத்தில் அவள்போக்கில் சில மாறுதல்கள் தெரிந்ததை என்னால் உணரமுடிந்தது.
அதிகமாக வெளியே காண முடிந்ததில்லை. அனேகமான நாட்களில் காலையிலே பியர் டெலிவரி செய்பவன் வந்து கதவைத் தட்டுவதை கேட்டு நான் எழுந்திருந்திருக்கிறேன். இதென்ன புதுப்பழக்கம்? காலையிலேயே ஆரம்பித்து விடுகிறாளா? என்று சினந்து கொண்டேன். ஆயினும் ஒன்றும் பட்டுக்கொள்ளவில்லை. எனக்கிருக்கும் தலைபோகிற பிரச்சனைகளுக்குள் இதற்குள்ளே எதற்குத் தலையைப் போடுவானென்று ஒதுங்கிவிட்டேன். டொரண்டோ நண்பர்கள் ஒரு வேலையும் வாடகைக்கு ஒரு சிறு அறையையும் பிடித்துக் கொடுத்து உடுக்கை இழந்துகொண்டிருந்த எனது ---------- கைக் காப்பாற்றினார்கள்!!!  எனது குடியிருப்பைத் தளபாடங்களோடு வாடகைக்கு விட்டுவிட்டு மொறீஸ் இடம் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு ஜோயானியிடம் சொல்லிக்கொள்ளாமலே 401 மேற்கு நெடுஞ்சாலையில் பயணித்தே விட்டேன்.
ஒரு வருடம் கழித்து விடுமுறையில் வாடகைக்கு வீடெடுத்தவன் என்னபாடு படுத்தி வைத்திருக்கிறான் பார்ப்போமே என்று மாண்ட்றியாலுக்குத் திரும்பி வந்தேன். தரிப்பில் வாகனத்தை நிறுத்திவிட்டு நிமிர்ந்தால் ஜோயானியின் வீட்டுக்குக் கீழேயிருக்கும் குடியிருப்பின் தரைமட்டத்திலிருந்து சிறிது கீழீறங்கிய கோடைகால இருப்பிடத்தில் ஒரு பூனை படுத்திருக்க மூன்று சின்னச்சிறிய குட்டிகள் தாயின்மீது ஏறிப்புரண்டு கொண்டும் அவ்வப்போதில் அதன் அசைந்துகொண்டிருந்த வாலைப் பிடித்து நிறுத்தும் முயற்சியிலும் மும்முமுரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தன. அவ்வப்போதில் தாயின் வயிற்றுப்பாகத்தில் இருந்த இளஞ்சிவப்பு நிறத்து முலைக்காம்புகளைப் பற்றிப் பாலையும் குடித்துக் கொண்டிருந்தன. சிறிது நேரம் காருக்குள் உட்கார்ந்தபடியே பார்த்துக்கொண்டிருந்தேன். எடுத்துக்கொண்டு போய் விடலாமா என்று ஆழ்மனத்தேயிருந்தெழுந்த சுனாமியை அடக்கிக்கொண்டு காரை விட்டிறங்கிக் குடியிருப்புக் கட்டிடத்தினுள்ளே  நுழைந்தேன்.
எனது அறைவாசலுக்கு வருகையில் ஜோயானி வீட்டுக் கதவு சாத்தி இருந்தது. வாடகைக்கு விட்டிருந்த எனது அறைக் கதவைத் தட்டினேன். யாரும் திறக்கவில்லை. என்னிடமிருந்த மாற்றுச் சாவியால் கதவைத்திறந்து உள் நுழைந்து பார்த்தால் வீட்டைச் சுத்தமாகத்தான் வைத்திருக்கிறான். புகையிலை நாற்றங்களில்லை. க்யூபெக்குவாவாக இருந்தும் சிகரெட் பழக்கமில்லாதவன் போலும்! பட்ட மரத்தில் பால் வடிகிறதே...... !!! என்று நினைத்துக்கொண்டு மன நிறைவோடு கதவைப் பூட்டிவிட்டு வெளியே வருகையில் மொறீஸ் எதிர்ப்பட்டார். ''மொன்னமீ...... கொமோ ஸவா.... எஸ்கெ வூ ரெஸ்பிரே பியேன்....... விவே ஆன்பே அனொண்தாரியோ? '' (நண்பரே.... நலமா?.... நீ டொரண்டோவில் சுகமாக மூச்சு விட்டுக்கொண்டும்..... அமைதியாக வாழ்ந்துகொண்டும் இருக்கிறாயா? )என்று நளினம் கூடிய நக்கலுடன் வினவியவாறு அதே கணீர்க்குரலுடனும் கலகலப்பான சிரிப்புடனும் வரவேற்றார். சுக நலங்களை அளவளாவினோம். எழுபது வயதாகிறது. இன்னமும் மூன்று குடியிருப்புத் தொகுதிகளைப் பராமரித்துவரும் கடின உழைப்பாளி மொறீஸ். என்னை இங்கு குடிவந்த முதல் நாளே அவருக்குப் பிடித்திருந்தது. எனக்கும் தான். மனதிலிருந்து பேசுபவர்களையும் மனம் விட்டுச் சிரிப்பவர்களையும் யாருக்குத்தான் பிடித்துப்போகாது?
ஜோயானியைப் பற்றி விசாரித்தேன். மலர்ந்திருந்த முகம் மாறியது. அவள் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறாளாம். ஒரு மாதமாகிவிட்டதாம். மார்பகப் புற்றுநோய் முற்றிய நிலையில்  அறுவை சிகிச்சையால் அகற்றப்பட்டு விட்டதாம். தற்போது குணமடைந்து வருகிறாளாம். இன்னமும் ஓரிரு வாரங்களில் வீடு வந்துவிடுவாளாம். விபரமாகச் சொன்னார். அவளுக்கு ஆறு வயதான போது தாயார் கணவனிடமிருந்து விவாகரத்துப் பெற்றுக்கொண்டு போய்விட்டாளாம். தகப்பன் தான் வளர்த்தாராம். அவரிடமிருந்து அவள் புகைப்பழக்கத்தை வளர்த்துக்கொண்டாளாம். அதன் விளைவை இப்போது அனுபவிக்கிறாளாம். சலித்துக்கொண்டே சொன்னார் மொறீஸ். பஸ்கால் திருந்தித் திரும்பி வந்து மூன்று மாதங்களாகிவிட்டதாம். வேறு வதிவிடங்கள் இல்லாததனாலோ என்னவோ ஜோயானியோடு தான் தங்கியிருக்கிறான் என்றும் ஆனால் நாளதுவரையில் ஏதொரு அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என்றும் தாய் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து அவன்தான் கூடவே இருந்து பார்த்துக்கொள்கிறான் என்றும் தகவல்கள் தந்தார். ஏதோ நல்லது நடந்தால் சரி..... அந்த அம்மணி வாழ்நாளில் பட்டுழன்ற துன்பங்களிலிருந்து இனியாவது விடுபடட்டும் என்று சொன்னேன்.  அவன் ஒழுங்காக இருப்பதுபோல் தான் தெரிகிறது...... ஒரு மனிதன் எப்போதுமே கெட்டுழல்வதில்லை..... திருந்த முடியாதவனாகவும் இருப்பதில்லை என்று மொறீஸ் கூறினார். இது அவருடைய வாழ்நாள் அனுபவங்கள் பிரசவித்த வார்த்தைகள் என்பதை என்னால் உய்த்துணர முடிந்தது.

என்னைப் பற்றி விசாரித்தார். ஏதோ காலம் ஓடுகிறதென்றேன். சிரித்துவிட்டு எப்போது டொரண்டோ திரும்புகிறேன் என்று கேட்டார். இரண்டு வாரங்கள் விடுமுறை என்றும் எனது வீட்டில் குடியிருப்பவரின் வாடகை ஒப்பந்தப் பத்திரத்தைப் புதுப்பிக்க வேண்டுமென்றும் அதற்காக மீண்டும் ஒரு முறை டொரண்டோ போக முதல் வருவேனென்றும் சொல்லிவிட்டு வாழ்த்துச் சொல்லி விடை பெற்றுக் கிளம்பினேன் தங்கிருக்கும் எனது நண்பரின் வீட்டை நோக்கி லவாலுக்கு.

சரியாகப் பன்னிரண்டு நாட்கள் கழித்துத் திரும்பவும் வந்தேன் வாடகை ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கவேண்டி. பார்க்கிங் லாட்டில் காரை நிறுத்திவிட்டு நிமிர்ந்தால் ஜோயானி வீட்டு பால்கணியில் பஸ்கால் ஒரு பூனைக்குட்டியோடு பிரஞ்சில் பேசிக்கொண்டும் மடியில் வைத்து விளையாடிக்கொண்டும் இருந்தான். குட்டிப்பூனையும் பதிலுக்கு ஏதேதோ பேசித்தள்ளிக்கொண்டிருந்தது. அவனது இடது தோளில் ஏறிப் பிடரி வழியாக நடந்து வலது தோள் வழியாக இறங்குவதும் பின் ஏறுவதுமாகத் துருதுருவென்றிருந்தது. பஸ்கால் மல்லாக்காகப் படுத்தபோது அவனது வெற்றுடம்பில் புரண்டு விளையாடியது. நான் வந்ததே அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. காருக்குள் உட்கார்ந்த படி பார்த்துக்கொண்டே இருந்தேன். பார்வையைக் கீழே இறக்கியதும் அன்று பார்த்த மூன்று பூனைக்குட்டிகளில் ஒன்றைக் காணவில்லை. மீதமிரண்டும் தாயிடம் பால் குடித்து மயங்கிக் கிறங்கின.
''பஸ்கால்...... இரவு உணவு தயாராக இருக்கிறது சுடச்சுட...... ஆறிப்போகமுன் வா.... சாப்பிட்டுக்கொள்......'' என்ற அழைப்புக் குரல் பலமாகக் கேட்டது. ஜோயானியேதான் அந்தத் தெளிந்த அன்பில் நெகிழ்ந்த ஓசைக்குச் சொந்தக்காரி.
நான் வந்த வேலையை முடித்துக்கொண்டு 401 மேற்கு நெடுஞ்சாலையை நோக்கி எனது வாகனத்தின் ஆர்முடுகலை அதிகரித்தேன். நெஞ்சுக்குள் மேகங்கள் பஞ்சுப் பொதிகளாய் நகர்வது போலவும், இனங்காணப்படாத ஒரு நிறைவு நிறைந்து கிடப்பது போலவும் தென்பட்டது. எதனால் என்ற அர்த்தங்களைப் புரிந்து கொள்ள என்னால் இயலவில்லை. ஆயினுமென்ன.....? உள்ளே இருக்கும் அந்தச் சிறிய மனிதன் அர்த்தப்படுத்திக் கொள்வான் என்றே நம்புகிறேன்.